டெல்லி அரசுக்கும் மத்திய அரசின் பிரதிநிதியான துணை நிலை ஆளுநருக்கும் இடையே அதிகார போட்டி நிலவி வந்த நிலையில், அதை தீர்க்கும் வகையில் வழக்கு தொடரப்படட்டது. அதாவது, ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கும் விவகாரத்தில் டெல்லி அரசுக்கு, துணை நிலை ஆளுநருக்கும் பிரச்னை நீடித்து வந்தது.


ஆளுநர்கள் vs மாநில அரசுகள்:


இந்த சட்ட போராட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான மாநில அரசுக்கு மிக பெரிய வெற்றி கிடைத்துள்ளது. மக்களின் விருப்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சட்டம் இயற்றும் அதிகாரம் டெல்லி சட்டப்பேரவைக்கு வழங்கப்பட்டுள்ளது என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு அளித்துள்ளது. 


மத்திய அரசுக்கும் பாஜக அல்லாத மாநில அரசுகளுக்கும் இடையே அதிகார போட்டி நிலவி வருகிறது. தமிழ்நாடு, தெலங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவைகளில் இயற்றப்படும் சட்டங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதில்லை என அந்தந்த மாநில அரசுகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.


இப்படிப்பட்ட இக்கட்டான அரசியல் சூழலில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக, இந்த தீர்ப்பில் பல முக்கிய கருத்துகள் இடம்பெற்றுள்ளன. ஆளுநரின் அதிகாரம் எவ்வளவு, யூனியன் பிரதேச அரசுக்கு எவ்வளவு என்பது குறித்து வரையறுக்கப்பட்டுள்ளது.


உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு:


"ஜனநாயக ஆட்சி முறையில், நிர்வாகத்தின் உண்மையான அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் கையில் இருக்க வேண்டும்" என உச்ச நீதிமன்றம், மாநில அரசுகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளது.


பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசும் சட்டங்களை இயற்றலாம், மாநில அரசும் சட்டங்களை இயற்றலாம். இப்படி, இரண்டு அரசுகளும் அதிகாரம் பெற்ற விவகாரங்களில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.


அதில், "மத்திய அரசும், மாநிலங்களும் சட்டம் இயற்றக்கூடிய விஷயங்களில் மத்திய அரசின் அதிகாரம், ஆட்சியை மத்திய அரசு கையகப்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் இருக்க வேண்டும்" என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


"ஆளுநர் கட்டுப்பட வேண்டும்"


ஐஏஎஸ் அதிகாரங்களை நியமிக்கும் விவகாரத்தில் டெல்லி அரசுக்கே அதிகாரம் உள்ளது என தெரிவித்த அரசியல் சாசன அமர்வு, "டெல்லி அரசு, ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கும் விவகாரத்தில் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். துணை நிலை ஆளுநர், மாநில அரசின் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டும்.


அதிகாரிகள் அமைச்சர்களிடம் கட்டுப்படுவதை நிறுத்தினால் அல்லது அவர்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை என்றால், கூட்டுப் பொறுப்புக் கொள்கை பாதிக்கப்படும். அமைச்சரவையின் ஆலோசனைகளுக்கு துணை நிலை ஆளுநர் கட்டுப்பட வேண்டும்.


ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் தனது அதிகாரிகளை கட்டுப்படுத்த அனுமதிக்கப்படாவிட்டால், சட்டமன்றம் மற்றும் பொதுமக்கள் மீதான அதன் பொறுப்பு நீர்த்துப்போகும்" என தெரிவித்துள்ளது.