பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனிடம் இருந்து நிதித்துறை பறிக்கப்பட்டதற்கு, பின்னணியில் 6 முக்கிய காரணங்கள் இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியிருக்கிறது.


பண்ணையார் மனநிலை:


2021ம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் நிதித்துறை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வசம் ஒப்படைக்கப்பட்டது. நிதித்துறைக்கு சரியான தேர்வு பிடிஆர் என அப்போது பலராலும் பாராப்பட்டார். பொருளாதாரம் தொடர்பான அவரது நடவடிக்கைகளுக்கும், பேச்சுகளுக்கும் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருந்தது. அப்படி இருந்தும் அவரிடம் இருந்து நிதித்துறை பறிக்கப்பட்டதற்கு அரசு மற்றும் கட்சி ரீதியான காரணங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.


முதலாவது, மற்றவர்களின் கருத்துகளுக்கோ, முடிவுகளுக்கோ கட்டுப்பட்டு செயல்பட பிடிஆர் தயாராக இல்லை. தான் மட்டுமே முடிவெடுத்து, அதன்படி மட்டுமே செயல்படுவேன் என்ற ’பண்ணையார்’ மனநிலையில் பிடிஆர் இருந்ததாகவும், அதனால் அகட்சிக்குள்ளும் சுமூகமற்ற சூழல் உருவாகியதாகவும் சொல்லப்படுகிறது.


இரண்டாவதாக, மதுரை திமுக வட்டாரத்தில் பிடிஆருக்கு போதிய வரவேற்பு கிடையாது. பிடிஆருக்கும், பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்திக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே பனிப்போர் இருந்து வந்தது என்றே சொல்லலாம். உதாரணமாக, மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது பிடிஆர் சார்பில் மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் அவரது ஆதரவாளர்கள் தவிர மற்ற அமைச்சர்களோ, திமுக நிர்வாகிகளோ கலந்து கொள்ளவில்லை. இந்த நிகழ்ச்சிக்கு யாரும் போகக் கூடாது என சிலர் மிரட்டி வைப்பதாக பிடிஆர் குற்றம்சாட்டியிருந்தார்.


அப்செட்டாகிய முதல்வர்:


அதேபோல் பத்திர பதிவுத்துறை சார்பாக அனுப்பி வைக்கும் பில்களுக்கும் நிதியமைச்சர் ஒப்புதல் கொடுக்காமல் இருந்ததாகவும் விமர்சிக்கப்பட்டது. அதோடு, மதுரை மேயரைத் தேர்வு செய்வதில் அமைச்சர் மூர்த்தி மற்றும் பிடிஆரிடையே இடையே உரசல் இருந்தது. கடைசியில் பிடிஆர் ஆதரவாளரான இந்திராணியே மேயராக தேர்வு செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் இருந்து இருவருக்குள்ளும் பகைமை அதிகரித்த நிலையில், மூர்த்தி, பொன்.முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் மூத்த அமைச்சரான கே.என்.நேருவிடம் புகார் வாசித்திருந்தனர். இந்த விவகாரமும் முதல்வர் மு.க.ஸ்டாலினை அப்செட் ஆக்கியதாக சொல்லப்படுகிறது. 


மூன்றாவதாக, பத்திர பதிவுத் துறை மட்டும் இல்லாமல், மற்ற துறைகள் சார்பாக அனுப்பி வைக்கப்படும் பில்களுக்கும் பிடிஆர் உடனடியாக ஒப்புதல் தருவது கிடையாது என்ற புகாரும் இருந்தது. கேள்விகள் கேட்டு பில்களை திருப்பி அனுப்பி வைப்பது மற்ற அமைச்சர்களுக்கும் குறிப்பாக துறை அதிகாரிகளுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. தன்னிடம் 5000 கோப்புகள் வந்துள்ளதாகவும், அதில் 100க்கும் மேற்பட்ட கோப்புகளை திருப்பி அனுப்பியதாகவும் பிடிஆரே ஒருமுறை பேசியிருந்தார். இதனால் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு பிடிஆர் முட்டுக்கட்டையாக இருப்பதாக அமைச்சர்களே விமர்சித்தனர். ஒருமுறை கூட்டுறவுத் துறை செயல்பாடுகளில் தனக்கு திருப்தி இல்லை என பிடிஆர் பேச, மூத்த அமைச்சரான ஐ.பெரியசாமி ரேஷன் கார்டு பற்றி தெரியாதவர்களுக்கு எல்லாம் பதிலளிக்க முடியாது என்று பிடிஆரை நேரடியாகவே விமர்சித்திருந்தார்.


பிடி கொடுக்காத பி.டி.ஆர்.:


நான்காவதாக, கட்சிக்காரர்கள் யாருக்கும் பிடிஆர் எந்த வகையிலும் உதவுவதில்லை என்பதால் திமுகவினரே அதிருப்தியில் இருக்கின்றனர். ஏதாவது உதவி என்று கேட்டுப் போனால் பிடிஆரால் எந்த பலனும் கிடைக்கவில்லை என்று புலம்பியது தலைமை வரை சென்றுள்ளது. அதோடு, மதுரையில் தனக்கு நெருக்கமாக சிலரை வைத்துக் கொண்டு தனி ஆவர்த்தனம் செய்வதாகவும் முதல்வர் அலுவலகத்திற்கு புகார் தட்டிவிடப்பட்டது.


ஐந்தாவதாக, அரசு ஊழியர்களும் பிடிஆருக்கு எதிரான மனநிலையில் இருந்தனர். திமுக கொடுத்த வாக்குறுதிகளில் மிக முக்கியமானது, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் இருக்கும் சிக்கல்கள் பற்றி பிடிஆர் பேசியதற்கும் அதனை அமல்படுத்த முடியாது என்ற வகையில் பிடிஆர் பேசியதற்கும் அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரை நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று தலைமைச் செயலகம் வரை சென்று புகாரே கொடுத்திருந்தனர். 


ஆடியோ:


ஆறாவதாக, பிடிஆர் துறை மாற்றப்பட்டதற்கு ஆடியோ விவகாரம் முக்கிய காரணமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசனை குற்றம்சாட்டி பிடிஆர் பேசுவது போல ஆடியோவை வெளியிட்டார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் பிடிஆரை நிதித்துறை பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என மற்ற அமைச்சர்களும், கட்சியினரும் முதலமைச்சருக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ஆடியோவால் உதயநிதி ஸ்டாலினும் சபரீசனும் அதிருப்தியில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதனால்தான், திமுக அரசின் 2ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மதுரையில் நடந்தபோது அதில் கூட பிடிஆர் பங்கேற்க முடியவில்லை.


ஆடியோ விவகாரம் மட்டுமல்லாமல் கடந்த சில மாதங்களாகவே பிடிஆரின் செயல்பாடுகளில் ஏற்பட்ட அதிருப்தியாலும் நிதித்துறை அவரிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்ற அமைச்சர்கள் மற்றும் கட்சிக்காரர்களின் கோரிக்கைக்கு ஸ்டாலின் செவி சாய்த்து இந்த முடிவை  எடுத்ததாக சொல்லப்படுகிறது.