மாயமானும், மண்குதிரையும் ஒன்று சேர்ந்துள்ளன என ஓபிஎஸ், டிடிவி இணைப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”காலியான கூடாரத்தில் ஓபிஎஸ் புகுந்துள்ளார். டிடிவி தினகரன் கூடாரம் ஏற்கெனவே காலியாகி விட்டது. அடிக்கடி கட்சி மாறுபவர் பண்ரூட்டி ராமச்சந்திரன். கிளைச்செயலாளருக்கு இருக்கும் தகுதிகூட பண்ரூட்டி ராமச்சந்திரனுக்கு இல்லை. அவர் எந்த கட்சிக்கும் விசுவாசமாக இருந்தது இல்லை. திமுகவின் பீ டீம் ஓபிஎஸ் என்பது நிரூபணமாகியுள்ளது. ஓபிஎஸ்  டிடிவி சந்திப்பின்போது மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் உடன் இல்லை” எனத் தெரிவித்தார். 


முன்னதாக, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரனை அவரது வீட்டிற்கே நேரில் சென்று முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்தார்.  


பன்னீர்செல்வத்துடன் இணைந்து முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனும் டிடிவியை சந்தித்தார்.


தனது வீட்டுக்கு வந்த ஓ. பன்னீர்செல்வத்தையும் பண்ருட்டி ராமச்சந்திரனையும், டி.டி.வி தினகரன் வாசல் வரை சென்று வரவேற்றார். இருவருக்கும் பொன்னாடை அணிவித்தார். அரசியல் சூழல் குறித்து பன்னீர்செல்வம், டிடிவி ஆலோசனை நடத்தினர்.  பின் அனைவரும் சேர்ந்து செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.


அப்போது, டிடிவி, ஓபிஎஸ் சேர்ந்து செயல்பட முடிவு என முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்தார். பின்னர் பேசிய டிடிவி தினகரன், "அதிமுகவை மீட்க ஓ. பன்னீர்செல்வமும் நானும் ஒன்றிணைந்துள்ளோம் என்று தெரிவித்தார்.


நேரில் சந்திக்கவில்லையே தவிர ஓ. பன்னீர்செல்வத்திடம் அடிக்கடி தொலைபேசியில் பேசினேன். ஓபிஎஸை நம்பி இருட்டில் கூட கையை பிடித்து செல்ல முடியும். எங்களுக்கு ஈபிஎஸ் துரோகி. திமுக எதிரி" என்றும் டிடிவி தெரிவித்தார்.


"கடந்த காலங்களை மறுந்துவிட்டு இருவரும் ஒன்றிணைந்துள்ளோம்" என ஓபிஎஸ் கூறியுள்ளார். சசிகலா வெளியூரில் இருப்பதால் அவர் வந்தவுடன் விரைவில் அவரையும் சந்திப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், சசிகலா, டிடிவியை எதிர்த்து ஓபிஎஸ் தரம்யுத்தம் நடத்தினார். இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரான பிறகு, சசிகலா, டிடிவி ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் இணைந்து கட்சியை வழிநடத்தி வந்தனர்.


ஆனால், எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு இடையே அதிகார மோதல் ஏற்பட்டது, இந்நிலையில் கட்சியின் பெரும்பாலான தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களாக மாறினார். ஓ. பன்னீர்செல்வத்தையும் அவரது ஆதரவாளர்களையும் பழனிசாமி அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கினார். தற்போது எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொது செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நிலையில் இபிஎஸ் அணியினர் குஷியில் உள்ளனர். அடுத்து ஓபிஎஸ் என்ன செய்ய போகிறார் என்று அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் டிடிவியை சந்தித்து ஓபிஎஸ் ஆலோசனை நடத்தினார்.