திரைத்துறையில் இருந்தாலும் தமிழக அரசியல் களத்தில் எப்போதும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு பெயர் ரஜினி. 1996-ல் அதிமுக ஆட்சிக்கு எதிராக அவர் குரல் கொடுத்தது தொடங்கி கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் வரையிலும் அவர் அரசியலுக்கு வருவாரா ? அல்லது ஏதாவது கட்சிக்கு ஆதரவாக குரல் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.



ரஜினி


யோகியுடன் சந்திப்பு - ஆளுநருடன் ஆலோசனை


தனது உடல்நிலையை கருத்தில்கொண்டு அரசியலுக்கு வருவதை ரஜினிகாந்த் தவிர்த்தாலும் அரசியல்வாதிகளை சந்திப்பதை அவர் வழக்கமாக வைத்திருக்கிறார்.  சமீபத்தில் வெளியான ஜெயிலர் பட வெற்றியை தொடர்ந்து இமயமலை பயணத்திற்கு சென்ற ரஜினிகாந்த், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து பேசினார். பின்னர், ஜார்கண்ட் ஆளுநராக இருக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணனையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.


 



ஆதித்யநாத் காலில் விழுந்த ரஜினி


ஆளுநர் ஆவது உறுதி ? தேதி பின்னர் அறிவிக்கப்படும்..?


இந்நிலையில், ரஜினிகாந்திற்கு மத்திய பாஜக அரசு முக்கிய பதவி கொடுக்கப்போகிறது என்ற பேச்சுகள் தமிழ்நாட்டில் அடிபடத்தொடங்கின. இசைஞானி இளையராஜா போல அவருக்கு மாநிலங்களவை பதவி கொடுக்கப்படப்போகிறது என்றும் ஆளுநராக அவர் நியமிக்கப்படவிருக்கிறார் எனவும் தகவல்கள் கச்சைக்கட்டி பறந்தவண்ணம் இருக்கின்றன.


அதற்கு இன்னொரு காரணமாக அவரது சகோதரர் சத்தியநாராயணவின் பேட்டியும் அமைந்தது. ரஜினிக்கு ஆளுநர் பதவி தரப்படப்போகிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த சத்தியநாராயணா, அதனை மறுக்காமல் அது இறைவனின் கைகளில்தான் இருக்கிறது என்று நெருப்புக்கு எண்ணெய் ஊற்றினார். இந்த பேட்டிக்கு பிறகு ரஜினிகாந்த் ஆளுநராகவே ஆகிவிட்டதாகவெல்லாம் ’அவரது ரசிகர்களும் ஆதரவாளர்களும் வாட்ஸ்-அப்களில் சந்திரமுகி’ பட பாணியில் தீபம் கொளுத்தினர்.






குறிப்பாக, தெலுங்கானா முதல்வருக்கும் ஆளுநரான தமிழ்நாட்டை சேர்ந்த தமிழிசைக்கும் இடையே முரண்பாடுகளும் மோதல்களும் அதிகரித்து வரும் நிலையில், தமிழிசையை மாற்றிவிட்டு அந்த இடத்திற்கு ரஜினிகாந்த் கொண்டுவரப்படுவார் என்று தெலுங்கானா மாநிலத்திலேயே செய்திகள் எல்லாம் வெளியாகின.  இந்நிலையில், தற்போது ரஜினிகாந்த் ஆளுநராக நியமிக்கப்பட வாய்ப்பு இருக்கிறதா என ஏபிபி நாடு கள ஆய்வு செய்தது. மேலும் தெலுங்கில் வாசிக்க : Rajinikanth - Governor : తెలంగాణ గవర్నర్‌గా రజనీకాంత్? - సూపర్ స్టార్ సోదరుడి కీలక వ్యాఖ్యలు!



அகிலேஷ் யாதவுடன் ரஜினி


இப்போதைக்கு ஆளுநர் இல்லை - இது உறுதி!


அதில், தற்போதைக்கு ரஜினிகாந்த் ஆளுநர் ஆகவோ அல்லது எம்.பி உள்ளிட்ட முக்கியமான அரசியல் பதவிகளில் அமரவோ வாய்ப்பில்லை என்று தகவல் கிடைத்திருக்கிறது. ஜெயிலர் படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்து அவர் நடித்து முடித்த ‘லால் சலாம்’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. வரும் டிசம்பர் 12ஆம் தேதியான ரஜினிகாந்தின் பிறந்தநாள் அன்று லால் சலாம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



லோகேஷ் கனகராஜூடன் ரஜினி


அடுத்தடுத்து படங்கள், பிசியாக இருக்கும் ரஜினி


இந்த படத்திற்கு பிறகு ‘ஜெய்பீம்’ திரைப்பட இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நடிக்க ரஜினிகாந்த் ஒத்துக்கொண்டுள்ளார். அதற்கு அடுத்து ‘மாஸ்டர்’, ‘கைதி’, ‘விக்ரம்’ உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பதற்காக அவரிடம் கதை கேட்டுள்ளார். இப்படி, தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ரஜினிகாந்த் நடிக்கவிருப்பதால் அரசியலமைப்பு பதவியான ஆளுநர் பொறுப்பையோ, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையோ அவர் இப்போதைக்கு பெறமாட்டார் என ரஜினிகாந்தின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



மோடியுடன் ரஜினி


மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால்..!


2024ல் மீண்டும் பாஜக 3வது முறையாக ஆட்சி அமைத்தால், அந்த காலக்கட்டத்தில் கைவசம் இருக்கும் திரைப்படங்களை நடித்துக்கொடுத்துவிட்டு ஆளுநராகவோ அல்லது வேறு ஏதேனும் அரசியல் பதவியிலோ அமரலாம் என ரஜினிக்கு நெருக்கமான அரசியல் ஆளுமைகள் அவருக்கு ஆலோசனை சொல்லியிருப்பதாகவும் தேர்தல் சமயத்தில் எந்தவித பதவியையும் பெற வேண்டாம் என்றும் அவர்கள் கூறியிருப்பதாகவும் நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது.


அதே நேரத்தில், வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணிக்கு ஆதரவாக ரஜினியை தமிழ்நாட்டில் குரல் கொடுக்க வைக்கும் முயற்சிகளில் பாஜக இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.