தமிழக பாஜகவை குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


ஆளுநருடன் அண்ணாமலை சந்திப்பு:


சட்டமன்ற தேர்தலில் பாஜக 4 தொகுதிகளில் வென்றதற்குப் பின் தமிழகத்தின் பா.ஜ.க. பரபரப்பாக இயங்கி வருகிறது. தினம் ஒரு விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு ஆளும் கட்சியை விமர்சிப்பது, போராட்டம் நடத்துவது என கிட்டதட்ட ஒரு எதிர்கட்சிக்கு நிகராக நடவடிக்கைகளை கையில் எடுத்து வருகிறது.


அந்த வகையில் சில தினங்களுக்கு முன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில்,  சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்க விழாவில் மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வேலை செய்யவில்லை. பிரதமருக்கே பாதுகாப்பு வழங்க முடியாத ஆளும் திமுக அரசால் மக்களுக்கு எப்படி மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியும்? இதுகுறித்து ஆளுநரிடம் ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளோம் என தெரிவித்தார். 






மேலும் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பான விவகாரத்தில் அவசரச் சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தாதது ஏன்? ஆளுநர் மீது பழிபோட்டு, மக்களை திமுக அரசு ஏமாற்றப் பார்க்கிறது எனவும் அண்ணாமலை கடுமையாக விமர்சித்தார். அதேபோல் மத்திய அரசின் வீடு தோறும் குடிநீர் திட்டத்தில் மாநில அரசு ஏராளமான முறைகேடு செய்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.


அண்ணாமலை எச்சரிக்கை:


இப்படியான குற்றச்சாட்டுகளுக்கு தமிழக அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டாலோ அல்லது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டாலோ அப்பிரச்சனையை கிடப்பில் போட்டு விட்டு வேறு பிரச்சனையில் பாஜக கவனம் செலுத்த தொடங்கி விடுகிறது. இதற்கிடையில் சமீபத்தில் தமிழக பாஜகவில் உள்ள சிலர் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அண்ணாமலை, கட்சியின் லட்சுமண ரேகையை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 


ஸ்டாலின் உறுமினால் பதுங்குவதா..?


இப்படியான தமிழக அரசியலில் திமுக -பாஜக மோதல் போக்கை பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் பதிவிட்ட ட்வீட்டில், தமிழகத்தில் தி.மு.க.வுக்கு தாங்கள் தான் எதிர்கட்சி என்று சொல்லும் பாஜக,   ஸ்டாலின் உறுமும்போது மட்டும் பயந்து பதுங்கும் பூனைகளால் நிறைந்திருக்கிறது. சினிமா கலாச்சாரம் தமிழக பாஜகவை அழித்துவிட்டது என தெரிவித்துள்ளார். 


சமீபகாலமாக தமிழக பா.ஜ.க.வில் சர்ச்சைக்குரிய நிகழ்வுகள் அரங்கேறி வருவதும், அண்ணாமலை அதிரடி நடவடிக்கையை கட்சியில் எடுத்து வரும் நிலையிலும் சுப்பிரமணிய சுவாமி தமிழக பா.ஜ.க.வை விமர்சித்து பதிவிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.