அதிமுகவின் வங்கி கணக்குகளை முடக்கி வைக்கக்கோரி ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் சென்னை மண்டல இயக்குநருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். 


கடந்த ஜூலை 11 ஆம் தேதி சென்னை  வானகரத்தில்நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டர். இதனைத் தொடர்ந்து கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். அந்த பொறுப்புக்கு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 


இதனைத் தொடர்ந்து அதிமுகவின் வங்கி கணக்குகள் உள்ள வங்கியின் மேலாளர்களுக்கு கடிதம் எழுதிய எடப்பாடி பழனிசாமி, அதில் அதிமுக கட்சி சார்பான வங்கி வரவு, செலவு  நடவடிக்கைகளை திண்டுக்கல் சீனிவாசன் மேற்கொள்வார் என தெரிவித்திருந்தார். மேலும் காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை அவர் மேற்கொள்வார் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.


இந்த கடிதத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ், சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு கடிதம் எழுதினார்.அதில் அதிமுக தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களிலும், தேர்தல் ஆணையத்திலும் நிலுவையில் இருக்கும் நிலையில் நான் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும், பொருளாளராகவும் தொடர்கிறேன். எனவே திண்டுக்கல் சீனிவாசன் அல்லது வேறு யாரையும் கட்சியின் கணக்குகளை இயக்க அனுமதிக்க வேண்டாம் என தெரிவித்திருந்தார்.  


ஆனால் ஓபிஎஸ் வெறும் கடிதம் மட்டுமே அனுப்பிய நிலையில், இபிஎஸ் அனுப்பிய கடிதத்தோடு அதற்கான ஆவணங்களும் இடம்பெற்றதாக கூறி திண்டுக்கல் சீனிவாசனுக்கு அதிமுகவின் வங்கி கணக்குகளை கையாள சம்பந்தப்பட்ட வங்கிகள் அனுமதி அளித்தது. இந்நிலையில் அதிமுகவின் 7 வங்கி கணக்குகளை முடக்கி வைக்கக்கோரி ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் சென்னை மண்டல இயக்குநருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். 


அந்த கடிதத்தில், அதிமுக பொதுக்குழு குறித்து தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும் வரை வங்கி கணக்குகளை முடக்க வேண்டும் என்றும், தேர்தல் ஆணையத்தின் படி தாம் தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டுள்ளார். சட்டவிதிகளை மீறி திண்டுக்கல் சீனிவாசனை பொருளாளராக எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார். எனவே வங்கிகளுக்கு ஆர்பிஐ உரிய வழிகாட்டுதல் தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 




ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண