பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசை காட்டிலும் மாநில அரசு அதிகப்படியாக செலவு செய்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மீண்டும் படையப்பா டயலாக்கை வைத்து கலாய்த்த முதல்வர்:
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் குறைந்தபட்ச 6 மத்திய அரசு திட்டங்களுக்கு மத்திய பாஜக அரசை விட மாநில அரசு அதிகம் செலவு செய்வதாக தி இந்து வெளியிட்ட செய்தியை மேற்கோள் காட்டிய முதலமைச்சர் ஸ்டாலின், படையப்பா டயலாக்கை வைத்து கலாய்த்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் இதுகுறித்து அவர் குறிப்பிடுகையில், "பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும் ஸ்டிக்கரில் பிரதமரின் முகத்தையும் தாங்கிச் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கெல்லாம் அவர்களைக் காட்டிலும் அதிகமாகப் படியளப்பது மாநில அரசுதான்!
படையப்பா படக் 'காமெடி' போல "மாப்பிள்ளை அவர்தான், ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது" எனச் சேலம் அரசுவிழாவில் பேசியிருந்தேன். பேசினேன் என்பதைவிட பேசவேண்டிய நிலைக்கு உள்துறை அமைச்சரின் அடிப்படையற்ற குற்றச்சாட்டால் தள்ளப்பட்டேன் என்றுதான் கூறவேண்டும். அது தி இந்து நாளிதழில் செய்தியாகி, தரவுகளோடு விவரிக்கப்பட்டுள்ளது. இனியாவது, கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறியும் பழக்கத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசு திட்டங்களுக்கு அதிகம் செலவு செய்வது யார்?
பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தை பொறுத்தவரையில், 60 விகித நிதி மத்திய அரசிடமிருந்தும் 40 விகித நிதி மாநில அரசிடமிருந்தும் வந்திருக்க வேண்டும். ஆனால், உண்மை நிலவரம் என்னவென்றால் 39 விகிதம் மட்டுமே மத்திய அரசிடமிருந்து வருகிறது. மீதமுள்ள 61 விகிதம் மாநில அரசின் நிதியில் செயல்படுத்தப்படுகிறது.
அதேபோல், இந்திரா காந்தி தேசிய ஓய்வூதிய திட்டத்தை பொறுத்தவரையில், 100 விகிதம் மத்திய அரசிடமிருந்து வந்திருக்க வேண்டும். ஆனால், (79 வயது வரையிலான பயனாளிகளுக்கு) 17 விகிதம் மட்டுமே மத்திய அரசிடமிருந்து வருகிறது. மீதமுள்ள 83 விகிதம் மாநில அரசின் நிதியில் செயல்படுத்தப்படுகிறது.
80 வயது வரையிலான பயனாளிகளுக்கு 41.67 விகிதம் மட்டுமே மத்திய அரசிடமிருந்து வருகிறது. மீதமுள்ள 58.33 விகிதம் மாநில அரசின் நிதியில் செயல்படுத்தப்படுகிறது.