எங்கள் உறவினர்களை ஏன் கைது செய்தீர்கள் ?

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வி. சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் , நேற்று நள்ளிரவு முகமூடி அணிந்து வந்த சிலர் " எங்கள் உறவினர்களை ஏன் கைது செய்தீர்கள் ?" என கேட்டு , காவல் நிலையத்தில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி உள்ளனர். மேலும், இரவு பணியில் இருந்த தலைமைக் காவலர் பால்பாண்டியை தாக்கி விட்டு தப்பி ஓடியுள்ளனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதல் குறித்து தகவலறிந்த காவல்துறையினர், குற்றவாளிகளை கண்டறிய விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்டவர்களை பிடிக்க வலைவீச்சு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இச்சம்பவம் காட்டு தீ போல் பரவிய நிலையில்,  முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், இன்று காலை காவல் நிலையத்திற்கு சென்று நிலைமையை பார்வையிட முயன்றார். ஆனால், காவல் துறையினர் அவரை ஊருக்கு வெளியே தடுத்து நிறுத்தி , உள்ளே அனுமதிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு , காவல் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படாததால் , உதயகுமார் பொதுமக்களுடன் சேர்ந்து ஊரின் எல்லையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.இந்த போராட்டம் சிறிது நேரம் நீடித்த நிலையில் , காவல்துறையினர் அவரை கைது செய்து, அருகிலுள்ள தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்; 

திமுக ஆட்சியில் காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லை எனவும் , காவல் நிலையத்தையே காக்க முடியாத இந்த பொம்மை முதல்வர், தமிழ்நாட்டு மக்களை எப்படி காக்கப் போகிறார் ?

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள V. சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று புகுந்த மர்ம நபர்கள் , காவல் நிலையத்தைத் தாக்கி , சூறையாடியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

இதனையடுத்து , எனது அறிவுறுத்தலின்படி, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் திரு. ஆர்.பி. உதயகுமார் அவர்கள் அக்காவல் நிலையத்தை பார்வையிடச் சென்ற போது , அவர் ஸ்டாலின் மாடல் அரசின் காவல் துறையால் தடுத்து நிறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளதற்கு எனது கடும் கண்டனம்.

ஸ்டாலின் ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. மக்களைக் காக்க வேண்டிய காவல் துறைக்கு பாதுகாப்பு இல்லை. தற்போது உச்சத்தின் உச்சமாக காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லை.

நான்காண்டு ஆட்சியின் சாதனைப் பட்டியலில் முதலில் சேர்க்க வேண்டிய சாதனை இது தான் மு.க ஸ்டாலின்.

உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் நிலையம் தாக்குதலுக்கு உள்ளாவது உங்களுக்கு வெட்கமாக இல்லையா பொம்மை முதல்வரே ? காவல் நிலையத்தையே காக்க முடியாத இந்த திமுக ஆட்சி, எப்படி மக்களைக் காக்கும் ? வாய்ப்பே இல்லை.

V. சத்திரப்பட்டி காவல் நிலையத் தாக்குதலில் ஈடுபட்டோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

எப்போதும் நான் சொல்வதை மீண்டும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒருமுறை சொல்லிக்கொள்ள விழைகிறேன்- மக்களே, இந்த ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு.