மதுரை மாவட்டம் மேலூரில் பா.ஜ.க சார்பில் மத்திய அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டார். முன்னதாக அவருக்கு மேளதாளம் முழங்க கும்பமரியாதை வழங்கி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதோடு பா.ஜ.க சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நேதாஜி படை என ஆண்களும், வேலுநாச்சியார் படை என பெண்களும் வரவேற்பு அளித்து சல்யூட் அடித்து மேடையில் வரவேற்றனர்.


 





நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணையமைச்சர் முருகன், 8 ஆண்டுகால பாரத பிரமரின் திட்டங்களை பட்டியலிட்டு விரிவாக உரையாற்றினார். தொடர்ந்து அவர் பேசுகையில், “சமூக நீதி பேசும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அருகதை இல்லை. பாஜகவில் இருந்து தான் பட்டியலினத்தவருக்கு அதிகளவு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் பட்டியல் இனத்தை சேர்ந்த அமைச்சர் கடைசி இடத்தில் தான் உள்ளனர். பட்டியலினத்தை சேர்ந்த அமைச்சருக்கு பொதுப்பணி, வருவாய் உள்ளிட்ட துறைகளை ஏன் வழங்கவில்லை.. இதுவா சமூக நீதி?. பாஜகதான் உண்மையான சமூக நீதிகொண்டது.

 



 

திருக்குறளை மேற்கொள் காட்டி அவர் பேசுகையில்,  “வானோக்கு வாழும் உலகமெல்லாம் கோனோக்கி வாழும் குடி எனும் குறளுக்கு ஏற்ப நேர்மையான, வீரமான ஆட்சியை வழங்கி வருவது நமது மோடிஜி எனவும் 2047இல் இந்திய நாட்டை ஏழை இல்லாத நாடு, பொருளாதார வளர்ச்சி, வல்லரசு ஆக அந்த பாதையை நோக்கி முன்னேறிக்கொண்டுள்ளோம்” என அப்போது பேசினார்.

 

நடைபெற்ற நிகழ்ச்சியில் முக்கிய நிர்வாகிகள் பேசும்போது மைக் முறையாக வேலை செய்யவில்லை என நிர்வாகிகள் இடையே சலசலப்பு ஏற்பட்டது. அதே போல் அதிகளவு கூட்டம் இருந்த சூழலில் எல்.முருகன் வந்தவுடன் அவரை பார்த்த உடன் தொண்டர்கள் கூட்டத்தில் இருந்து கிளம்பியதால் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த நபர்கள் சற்றே சோகமடைந்ததனர்.