16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கிய நிலையில் வரும் 24ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் எனவும், வரும் 24 தேதியன்று ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் பிற்பகல் 5 மணியளவில் திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணைப்பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்,
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுகவிற்கு கிடைத்த வெற்றி என்பது பெரிய இல்லை எனவும், அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற எம்.எல்.ஏக்கள் அனைவரும் இப்போதில் இருந்தே உழைக்கத் தொடங்க வேண்டும் என்றார். எம்.எல்.ஏக்கள் அனைவரும் சட்டப்பேரவையில் கேள்விகள் எழுப்புவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற மு.க.ஸ்டாலின். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்கும் போது மிகுந்த கவனத்துடனும் உரிய குறிப்புகள் உடனும் பதிலளிக்க வேண்டும் என தெரிவித்ததாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 66 எம்.எல்.ஏக்களுடன் அதிமுக வலுவான எதிர்க்கட்சியாக உள்ள நிலையில் பல்வேறு பிரச்னைகள் குறித்த விவாதங்களை சட்டப்பேரவையில் அதிமுக எழுப்பும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆளுநர் உரை இன்று நிறைவடைந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, நீட் தேர்வை தமிழக அரசு ரத்து செய்யாதது ஏன்? என்றும் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதை சுட்டிக்காட்டி விமர்சனம் செய்திருந்தார். திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரி குறைப்பு, பெண்களுக்கு மாதந்தோறும் உரிமை தொகை வழங்கும் திட்டம், முதியோர் உதவித்தொகையை 1500 ரூபாயாக உயர்த்துவது, தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளில் மாணவர்கள் வாங்கிய கல்விக்கடனை ரத்து செய்வது, கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன்கள் வரை நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட அறிவிப்புகள் ஆளுநர் உரையில் இடம்பெறாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பி இருந்தார். இந்த நிலையில் நாளை கூடும் சட்டபேரவையில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது