சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலச்சம்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து புதியதாக கட்டிமுடிக்கப்பட்ட வகுப்பறை கட்டிடங்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். தொடர்ந்து, பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம் கலந்துரையாடிய எடப்பாடி பழனிசாமி, மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
பின்னர் ஆலச்சம்பாளையம் மாரியம்மன் கோவில் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் ஆலச்சம்பாளையம் பகுதி மறக்கமுடியாத பகுதியாகும். சேவல் சின்னத்தில் 1989-ம் ஆண்டு சட்டமன்ற வேட்பாளராக நின்றது முதல், கடந்த பாராளுமன்றத் தேர்தல் வரை தொடர்ச்சியாக அதிமுகவிற்கு ஆதரவு அளித்து வருகின்றனர். கடந்த 13 ஆண்டுகளில் எடப்பாடி சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் மக்கள் தெரிவித்த அனைத்து கோரிக்கைகளையும் முழுமையாக நிறைவேற்றி உள்ளேன். கடந்த 13 ஆண்டுகளில் பொதுமக்களுக்குத் தேவையான வளர்ச்சித் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றார்.
சட்ட ஒழுங்கு சீர்கேடு:
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. எங்கு பார்த்தாலும் போதைப் பொருள் தங்கு தடையின்றி கிடைக்கிறது. போதைப் பொருள் விற்பனையால் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது. இதைப் பலமுறை தெரிவித்தும் சுட்டிக்காட்டியும் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போதைப் பொருள் விற்பனையை தடுக்க முடியாத திறமையற்ற பொம்மை முதலமைச்சராக ஸ்டாலின் இருப்பதால் இளைஞர்களின் எதிர்காலம் வீணாகி வருகிறது.
கார் பந்தயம்:
மக்களின் தேவைகளை நிறைவேற்ற வழியின்றி, கார் பந்தயம் நடத்த திமுக அரசு தயாராகி வருகிறது. கார் பந்தயம் நடத்த இருங்காட்டுக் கோட்டையில் இடம் இருக்கும் போது, அதை விட்டு விட்டு மக்கள் அதிகம் பயன்படுத்தக் கூடிய போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலைகளின் மக்களின் வரிப்பணத்தில் இருந்து ரூ.42 கோடி செலவில் கார் பந்தயம் நடத்த திமுக அரசு துடிக்கிறது. மக்கள் பணத்தை சூதாரித்தனமாக செலவிடுகிறார்கள். விளையாட்டுத் துறை அமைச்சர், விளையாட்டுத்தனமாக நடந்து கொள்கிறார். மக்களின் மனதை புரிந்து கொண்டு அதற்கான திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய அரசாங்கம் ஊதாரித்தனமாக மக்கள் பணத்தை செலவிடுவதை கடுமையாக கண்டிக்கிறேன் என்றார்.
விலைவாசி உயர்வு:
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது. விசைத்தறி தொழில் நசிந்து தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திமுக ஆட்சியில் அனைத்து தொழில்களும் நசிந்து விட்டது. மக்கள் பணத்தை நலிவடைந்த தொழிலை சீர் செய்யாமல் தேவையின்றி வீணடிக்கிறார்கள். திமுக ஆட்சியில் எடப்பாடி தொகுதியில் எந்த ஒரு திட்டமும் நிறைவேற்றவில்லை.
100 ஏரிகள் நிரப்பும் திட்டம்:
அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நல்ல திட்டங்களை திமுக அரசு முடக்கிவிட்டது. ரூ.565 கோடி மதிப்பில் கொண்டு வரப்பட்ட மேட்டூர் அணை உபரி நீரை 100 ஏரிகளுக்கு நிரப்பும் திட்டம், ரூ.1652 மதிப்பில் கொண்டு வரப்பட்ட அத்திக்கடவு அவினாசி திட்டம் என மக்கள் பயன்பெறக்கூடிய நல்ல திட்டங்களை எல்லாம் முடக்கிவிட்டார்கள். முந்தைய ஆட்சியின் நல்ல திட்டங்களை தொடர்வதுதான் நல்ல அரசாங்கமாக இருக்க முடியும். அதிமுக அரசின் திட்டங்களை செயல்படுத்த திமுக ஆட்சியாளர்களுக்கு என்ன மனத்தடை இருக்கிறது. நாங்கள் கட்டிய உக்கடம் பாலத்தை அவர்கள் திறக்கிறார்கள்.
திமுக ஆட்சியில் மின்கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு வரி 120 சதவீதம், சொத்து வரி 180 சதவீதம் உயர்த்தி விட்டு குப்பைக்கும் வரி போட்டு விட்டார்கள் என்று கூறினார்.