ஜார்க்கண்ட் முதலமைச்சர் பிறந்தநாள்:
ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், இன்று தனது 49 வது பிறந்தநாளை கொண்டாடினார். இன்று, அவர் கையில் கைதியின் முத்திரை இருப்பது போன்ற படத்தைப் பகிர்ந்து கொண்டார். எதற்காக பிறந்தநாளில் சிறைக்கைதியை முத்திரையை முதலமைச்சர் ஹேமந்த் சோரன் பகிர்ந்து கொண்டார், அதற்கான காரணம் என்ன என்று பார்ப்போம்.
கைது:
பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் ஜனவரி 31 அன்று, ஜார்க்கண்ட் முதலைச்சர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சோரன், உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து, ஜூன் 28 அன்று ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் காலம் சிறையில் இருந்தார், இதையடுத்து மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
”சவால்களின் சின்னமாகும்”
இந்நிலையில், சிறையில் இருந்து வெளியே வரும் போது , அவர் கையில் பதியப்பட்ட முத்திரையை X சமூக வலைதளத்தில் பதிவிட்ட சோரன் தெரிவித்துள்ளதாவது, “ இன்று, எனது பிறந்தநாளில், இந்த முத்திரை, கடந்த ஆண்டின் நினைவாகும். நான் சிறையில் இருந்து வெளியே வந்தபோது என் மீது வைக்கப்பட்ட அந்த முத்திரை என்னுடையது மட்டுமல்ல, நமது ஜனநாயகத்தின் தற்போதைய சவால்களின் சின்னமாகும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரையே, 150 நாட்கள் "எந்த ஆதாரமும், புகார் அல்லது குற்றமும் இல்லாமல்" சிறையில் அடைத்தால், "சாதாரண பழங்குடியினர், தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு" என்ன நடக்கும் என்பது தெளிவாகிறது.
"எனவே, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, தலித், பிற்படுத்தப்பட்ட, பழங்குடி, பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடுவதற்கான எனது உறுதிப்பாட்டை , இன்று நான் மேலும் வலுப்படுத்திக் கொண்டுள்ளேன். ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு நபர் மற்றும் சமூகத்திற்காகவும் குரல் எழுப்புவேன் என பதிவிட்டுள்ளார்.
ராகுல் காந்தி:
இதையடுத்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளதாவது, "நாட்டின் ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினரின் உரிமைகளுக்கான போராட்டத்தில், அவர்களுக்கு இழைக்கப்படும் ஒவ்வொரு அநீதிக்கும் எதிராக, இந்தியா கூட்டணி வலுவாகப் போராடும், ஒன்றாக நாம் வெற்றி பெறுவோம்" என தெரிவித்துள்ளார்.
JMM மற்றும் காங்கிரஸ் ஆகிய கூட்டணி மாநிலத்தில் ஆட்சியில் உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் ஜார்கண்ட் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக தலைமையிலான எதிர்க்கட்சியை மீண்டும் வீழ்த்தி ஆட்சியை பிடிக்குமா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.