தமிழகம் முழுவதும் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா‌ ஆன்மீக சுற்றுப்பயணமாக நேற்று மாலை சேலம் வந்தார். கடந்த மாதம் தென் தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களுக்கு ஆன்மீக சுற்றுப் பயணம் மேற்கொண்ட சசிகலா, இந்த முறை தமிழகத்தில் மேற்கு மாவட்டங்களான நாமக்கல், சேலம், ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற முக்கிய திருக்கோயில்களுக்கு சென்று வருகிறார். இதன்படி நேற்று காலை திருச்சியில் தனது ஆன்மீகச் சுற்றுப் பயணத்தை தொடங்கிய சசிகலா, முசிறி, தொட்டியம், நாமக்கல் மற்றும் திருச்செங்கோட்டில் உள்ள கோவில்களில் சுவாமி தரிசனத்தை செய்துவிட்டு சேலம் வருகை தந்தார்.



சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியில் உள்ள தீரன் சின்னமலை நினைவு தூண் அமைந்துள்ள பகுதிக்கு வருகை தந்த சசிகலாவிற்கு தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சார்பில் பட்டாசுகள் வெடித்து, பூக்களைத் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தூணுக்கு மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சத்தை ஆராய்ந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம். அதிமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பு ஒற்றை தலைமை வேண்டும் என்பதுதான் அது நிச்சயம் விரைவில் நிறைவேறும். அதிமுகவின் இன்னும் சசிகலாவின் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி தீர்க்கமாக உள்ளார் என்ற கேள்விக்கு, எடப்பாடி பழனிசாமி அதிமுக தொண்டர்கள் தான் கேள்வி கேட்க வேண்டும் என்றார். அதிமுக தலைவர் எம்ஜிஆர் காலத்தில் இருந்து கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை தான். அதனால் வழிவழியாக தொடர்ந்து வந்து கொண்டுள்ளது. ஓபிஎஸ், இபிஎஸ்வுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, கொஞ்சம் பொறுத்திருந்து பார்த்தால் அனைத்திற்கும் விடை கிடைக்கும். அனைத்தும் சரியாகும் என்று கூறினார்.



மிக விரைவில் நிச்சயம் மாற்றம் ஏற்படும் வரப்போகின்ற நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே மாற்றத்தை நிச்சயம் பார்க்கலாம். ஆன்மீக பயணம், அரசியல் பயணமாக மாறுமா என்ற கேள்விக்கு ஆம் இனிமேல் அதை தான் செய்ய உள்ளதாக தெரிவித்தார். இதை தொடர்ந்து சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோவிலுக்கு சென்ற சசிகலா, அங்கிருந்து சேலம் சின்னக்கடை வீதி பகுதியிலுள்ள அருள்மிகு ராஜகணபதி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.