பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் சகோதரரான 70 வயது ஷெபாஸ் ஷெரிப் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் நாட்டில் சில வாரங்களாக அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் இருந்த நிலையில், பிரதமராக இருந்த இம்ரான் கான் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. அவரின் கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் சகோதரரான 70 வயது ஷெபாஸ் ஷெரிப் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எதிர்க் கட்சிகள் இல்லாத நிலையில், வாக்கெடுப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள், இம்ரான் கானை பதவி விலகுமாறு தொடர்ந்து வலியுறுத்தி, அவருக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை க் கொண்டு வந்தன. ஆனால் தீர்மானத்தை துணை சபாநாயகர் நிராகரித்தார். எனினும் சபாநாயகரின் நடவடிக்கை செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
சமீப காலங்களாக சீனா, பாகிஸ்தானின் குறிப்பிட்ட சில பகுதிகளில் முதலீடு செய்துள்ளது. பாகிஸ்தான் தனது பொருளாதார வளர்ச்சிக்குக் கணிசமான அளவில் சீனாவையே நம்பியுள்ளது. ஆனாலும் பொருளதார நெருக்கடிகள் தீவிரமடைந்து வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
இதற்கிடையில் தொடர்ந்து நடைபெற்று வரும் மக்கள் போராட்டங்களின் நெருக்கடியை குறைக்க, நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க மக்கள் முன்வர வேண்டும் என்று பிரதமராக இருந்த இம்ரான் கான் கோரிக்கை விடுத்திருந்தார்.
மக்களின் இந்தப் போராட்டத்திற்குப் பின்னணியில் அமெரிக்கப் படைகளின் துருப்புகள் இருப்பதாகவும் அவர் சந்தேகம் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்