தமிழ்நாட்டின் பெரும் கட்சிகளில் ஒன்றான அதிமுகவில் முன்பு ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று உருவானது போல தற்போது எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என்று இரண்டு அணிகளுக்கிடையே அதிமுகவை யார் கைப்பற்றுவது என்ற போட்டி தீவிரமாகிவருகிறது. ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை மிஞ்சியவர்கள் யாரும் இல்லை என்று கூறி அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி காலியாக வைக்கப்பட்டது. அதனால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது.





இந்த நிலையில் ஒற்றைத் தலைமை தான் கட்சிக்கு இருக்கவேண்டும் என்று குரல்கள் எழுந்த நிலையில், யார் அந்த ஒற்றைத்தலைமை என்ற கேள்வி ஓங்கியது. இந்த ரேஸில் முன்னாள் முதலமைச்சருக்கு ஆதரவாக கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள் ஆதரவாக இருக்கவே, ஓ.பன்னீர் செல்வத்திற்கு பின்னடைவு ஏற்பட்டது.


ஜூன் 23ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், பொதுக்குழுவின் தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஓ.பன்னீர் செல்வம் பொதுக்குழுக் கூட்டத்தின் பாதியிலேயே வெளியேறினார்.


இந்த நிலையில், அதிமுக தலைமை நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஜூன் 27ம் தேதி காலை 10 மணிக்கு தலைமைக்கழக கூட்டம் நடைபெற உள்ளது என்றும், இக்கூட்டத்தில் தலைமைக்கழக நிர்வாகிகள் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியானது. கூட்ட அழைப்புகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி பெயருடனே அறிவிப்பு வெளியாகும் நிலையில், நேற்று வெளியான அறிவிப்பு யாருடைய பெயரும் இல்லாமல் வெளியானது.



சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியுள்ள நிலையில், பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்குவதற்கான முடிவு எடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் காலாவதியாகிவிட்டதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், ஓபிஎஸ்-சிடம் தற்போது கைவசம் இருக்கும் பொருளாளர் பதவியில் இருந்தும் நீக்கி, அவர் மற்றும் அவரது ஆதரவாளர்களை டம்மி செய்யலாம் என்றும், இந்த நீக்கத்தை சட்டச்சிக்கல்கள் ஏதுமின்றி எப்படி செய்வது என்று ஆலோசனை நடைபெற்றுவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் புதிய பொருளாளராக கேபி முனுசாமி நியமிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது




பொதுக்குழுக்கூட்டம் முடிந்ததும் டெல்லி சென்ற ஓபன்னீர்செல்வம் பிரதமருடனான சந்திப்புக்குப் பிறகு தேனி திரும்பினார். இந்நிலையில் இன்று ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் பன்னீர்செல்வம் அவசர அவசரமாக சென்னை திரும்புகிறார். மதுரை வரும் அவர், விமானம் மூலமாக சென்னை வந்தடைவார் என்று கூறப்படுகிறது.