நாம் தமிழர் கட்சியில், மக்களிடம் பிரபலமாக இருந்தவர்களில் காளியம்மாளும் முக்கியமான ஒருவர். அவர் அக்கட்சியிலிருந்து விலகப் போவதாக செய்தி வெளியானதிலிருந்தே, அவரை பல கட்சிகளுடன் இணைத்து பேசப்பட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது, அதிமுகவில் அவர் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


நாதகவிலிருந்து விலகிய காளியம்மாள்


நாம் தமிழர் கட்சியின் முக்கிய முகமாக விளங்கிய காளியம்மாள், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, அக்கட்சியிலிருந்து விலகுவார் என சமீபத்தில் செய்திகள் வெளியாகின.


அந்த செய்தி வெளியானதிலிருந்தே, காளியம்மாள் இந்த கட்சிக்கு போவார், அந்த கட்சிக்கு போவார் என்ற பேச்சுக்களும் தொடங்கிவிட்டன. ஆனால், நாதகவிலிருந்து விலகும் அறிவிப்பை அவர் வெளியிடாமலேயே இருந்தார். அந்த நேரத்தில், அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என உறுதியான தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், அவரும் தவெக-வின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவிற்கு இரண்டு நாட்கள் முன்னதாக, நாதகவிலிருநது விலகும் அறிவிப்பை வெளியிட்டார்.


தவெகவில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்க விஜய் ஒப்புக்கொண்டதாகவும், 2ம் ஆண்டு தொடக்க விழாவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்பட்டது. அதனால், அவர் தவெகவில் தான் இணைவார் என அனைவருமே உறுதியாக நம்பி காத்திருந்தனர். ஆனால், தவெகவின் 2ம் ஆண்டு தொடக்க விழாவிற்கு அவர் வரவே இல்லை. இதனால், காளியம்மாள் எங்கு போவார் என பெரும் கேள்விகள் எழுந்தன.


திமுகவில் காளியம்மாள் இணைவதாக வெளியான செய்தி


இப்படிப்பட்ட சூழலில், தவெகவுடன் பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், நாம் தமிழர் முன்னாள் பிரமுகரும், தற்போது திமுகவில் இருப்பவருமான ராஜீவ் காந்தி, காளியம்மாளுக்கு தூண்டில் போட்டு, திமுக பக்கம் இழுத்துவிட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின.


நாம் தமிழர் கட்சியில் சரியான அங்கீகாரம் கிடைக்காமல் துவண்டு போய் இருந்த காளியம்மாளுக்கு, திமுகவில் எம்.பி சீட் கொடுக்க முன்வந்ததாகவும், ஆளும் கட்சி என்பதால், காளியம்மாளும் அதற்கு ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி தீயாய் பற்றிக்கொண்டது. அதனால் விரைவில் காளியம்மாள் திமுகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது.


காளியம்மாள் அதிமுகவில் இணைவதாக வெளியான புதிய தகவல்


இந்த நிலையில், லேட்டஸ்ட் தகவலாக, காளியம்மாள் அதிமுகவில் இணையப் போவதாக செய்திகள் வந்துள்ளன. தவெக புதிய கட்சி, அதன் எதிர்காலம் எப்படி இருக்கும் என தெரியாது என்று கூறி, காளியம்மாளை திமுகவிற்கு இழுத்துவிட்டதாக செய்திகள் வந்த நிலையில், சைக்கிள் கேப்பில் புகுந்து, அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், காளியம்மாளை அதிமுகவிற்கு தட்டித் தூக்கிவிட்டதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.


அதிமுக தான் நிச்சயமாக அடுத்த ஆட்சியை அமைக்கும் என்றும், அப்போது, முதலமைச்சராக பொறுப்பேற்கும் எடப்பாடி பழனிசாமி,  காளியம்மாளுக்கு கட்சியில் பெரிய பொறுப்பு வழங்க காத்திருப்பதாகவும் கூறி, அவரை அதிமுக பக்கம் இழுத்துவிட்டதாக கூறப்படுகிறது.


முக்கிய கட்சிகளில் எல்லாம் சேர்த்துவிடப்பட்ட காளியம்மாள்


காளியம்மாள் இனி சேர்வதற்கு கட்சியே இல்லை என்ற அளவில், கிட்டத்தட்ட முக்கிய கட்சிகளில் எல்லாம் அவரை சேர்த்துவிட்டு செய்திகள் வெளியாகிவிட்டன. ஆனால், அவரோ இன்னும் மௌனம் கலைக்காமல் இருக்கிறார். உண்மையில் அவர் யாருடன் பேசி இருக்கிறார், என்ன முடிவெடுத்து இருக்கிறார் என அவரே வாய் திறந்தால்தான் உண்டு. ஆனால், அவர் அதை செய்யாத வரையிலும், இருக்கும் எல்லா கட்சிகளிலும் அவரை சேர்த்துவிட்டுவிடுவார்கள்.


எப்போது மௌனம் கலைப்பார் காளியம்மாள்.?