CM Stalin: வடமாநிலங்களில் கழிவறைக்கு செல்ல கூட இந்தி அறிந்து இருக்க வேண்டும் என, அற்பக்காரணங்களை கூறுவதாக முதலமைச்சர் சாடியுள்ளார்.

யார் தேச விரோதிகள்? - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்:

தமிழ்நாட்டின் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் முரசொலி நாளிதழில் உங்களில் ஒருவன் என்ற தலைப்பில் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில்,  “இனத்­தை­யும் மொழி­யை­யும் காக்­கும் போராட்­டக் களம் என்­றால் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் ஆளுங்­கட்­சி­யாக இருந்­தா­லும், எதிர்க்­கட்­சி­யாக இருந்­தா­லும் எப்­போ­தும் முதன்­மை­யாக நிற்­கும். 

வழக்­கு­கள், சிறை­வா­சம், உயிர்த்­தி­யா­கம் எல்­லா­வற்­றை­யும் தாங்­கித்­தான் தாய்­மொ­ழி­யாம் தமி­ழை­யும் தமி­ழர்­க­ளின் உரி­மை­யை­யும் காக்­கின்ற மகத்­தான இயக்­க­மா­கத் திமுக திகழ்­கி­றது. அத­னால்­தான், தி.மு.க ஒரு போராட்­டத்­தைக் கையில் எடுத்­தால் இந்­தி­யாவை ஆட்சி செய்­ப­வர்­கள் அஞ்­சு­கி­றார்­கள்–­அ­ல­று­கி­றார்­கள். நம்மை நோக்கி தேச­வி­ரோ­தி­கள் என்று குற்­றம்­சாட்­டு­ கி­றார்­கள். இந்­திய ஒன்­றி­யத்­தின் பன்­மு­கத் தன்­மை­யை­யும் மொழி வழிப் பண்­பா­டு­க­ளை­யும் சிதைத்து, ஒற்­று­மை­யைக் குலைப்­ப­வர்­கள் தான் உண்­மை­யான தேச­வி­ரோ­தி­கள்.

சமஸ்­கி­ரு­த­ம­ய­மாக்­கல் திட்டம்:

முதல் மொழிப் போர்க்­க­ளத்­தில் நாம் வெற்றி பெற்­றா­லும், போர் இன்­னும் தொடர்ந்து கொண்­டு­தான் இருக்­கி­றது. ஏனெ­னில், இது வெறும் மொழித் திணிப்பு மட்­டு­மல்ல. இந்­தித் திணிப்பை முன்னே விட்டு, அதன் தொடர்ச்­சி­யாக இந்த மண்ணை சமஸ்­கி­ரு­த­ம­ய­மாக்­கும் சதித்­திட்­டத்­து­டன், தமிழ்ப் பண்­பாட்­டின் மீது நடத்த நினைக்­கும் படை­யெ­டுப்பு இது. 

இந்­தி­யும் தமி­ழைப் போல ஒரு மொழி­தானே, கற்­றுக்­கொள்­ளக்­கூ­டாதா என்று கரி­ச­னத்­து­டன் பே­சு­கி­ற­வர்­க­ளி­டம்,“சமஸ்­கி­ரு­தத்­திற்­குப் பதில் தமி­ழி­லேயே கோவில்­க­ளில் அர்ச்­சனை செய்­ய­லாமா? தமி­ழும் செம்­மை­யான மொழி­தானே?”என்று கேட்­டுப் பாருங்­கள். அவர்­க­ளின் உண்­மை­யான நோக்­க­மும் அவர்­க­ளின் அடை­யா­ள­மும் அம்­ப­ல­மா­கி­வி­டும். அத­னால்­தான் இந்­தித் திணிப்பை எதிர்ப்­ப­தில் நாம் உறு­தி­யாக இருக்­கி­றோம்.

தமிழில் திட்டமுடியாதா? - ஸ்டாலின்

நேரு போன்ற தலை­வர்­கள் ‘வேற்­று­மை­யில் ஒற்­றுமை’ காணும் இந்­தி­யாவை உரு­வாக்­கி­னார்­கள். இன்­றைக்கு இந்­திய ஒன்­றி­யத்தை ஆட்சி செய்­கின்ற கட்­சி­யின் தலை­வர்­கள் இந்­தி­யைத் திணிப்­ப­தும், அதை ஏற்க மறுத்­தால் தமிழ்­நாட்­டிற்கு நிதி ஒதுக்­கா­மல் வஞ்­சிப்­ப­து­மாக இருக்­கி­றார்­கள். இதைத் தட்­டிக் கேட்க வேண்­டிய தமிழ்­நாட்டு பா.ஜ.க தலை­வர்­களோ, இந்தி தெரி­யாத தமி­ழர்­களை நோக்­கி­வ­ட­மா­நி­லத்­த­வர்­கள் திட்­டி­னால் புரிந்­து­கொள்­ள­மு­டி­யாது என்­றும், வட­மா­நி­லங்­க­ளுக்கு சென்­றால் உண­வ­கங்­க­ளில் ஆர்­டர் பண்ண முடி­யாது என்­றும், கழி­வறை செல்­வ­தற்­குக்­கூட இந்தி தெரிந்­தி­ருக்க வேண்­டும் என்­றும் எல்­லோ­ரும் எள்ளி நகை­யா­டும் வகை­யி­லான அற்­பக் கார­ணங்­க­ளைச் சொல்­கி­றார்­கள்.

ரயில் பய­ணத்­தில் இந்தி பேசும் மாநி­லத்­த­வர்­கள் தமி­ழர்­களை இந்­தி­யில் திட்­டி­னால், பதி­லுக்கு நம்­ம­வர்­கள் அவர்­க­ளைத் தமி­ழில் திட்ட முடி­யாதா? சுய­ம­ரி­யாதை உணர்­வும் சூடும் சுர­ணை­யும் உள்ள தமி­ழர்­கள் அப்­ப­டித்­தான் செய்­வார்­கள். இங்­குள்ள பா.ஜ.க. வினர் எப்­ப­டிப்­பட்­ட­வர்­களோ!

திராவிடத்தின் பலன்

அந்­தந்த மாநில ரயில் நிலை­யங்­க­ளி­லும் அவ­ர­வர் தாய்­மொழி முதன்­மை­யா­க­வும், இந்தி எழுத்­து­கள் அடுத்­த­தா­க­வும், ஆங்­கி­லம் மூன்­றா­வ­தா­க­வும் இருக்­கி­ற­தென்­றால் அதற்கு திரா­விட இயக்­கம் முன்­னெ­டுத்த மொழிப் போராட்­டமே கார­ண­மா­கும். தமிழை மட்­டு­மல்ல, இந்தி ஆதிக்­கத்­தி­ட­மி­ருந்து மற்ற மாநி­லத்­த­வர்­க­ளின் தாய்­மொ­ழி­யை­யும் காப்­ப­தற்கு திரா­விட இயக்­கத்­தின் உறு­தி­யான இந்தி ஆதிக்க எதிர்ப்­பு­ணர்வே முதன்­மை­யாக உள்­ளது” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.