மதுரையில் வருகிற ஆகஸ்ட் 20ஆம் தேதி அ.தி.மு.க., பொன்விலான மாநாடு நடைபெற உள்ளதையொட்டி வளையங்குளம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இடத்தை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பிஉதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தபோது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ,”தமிழ்நாடு தழுவிய மாநாட்டை நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். தென் தமிழகத்தின் தலைநகராக இருக்கக்கூடிய மதுரையில் இந்த மாநாடு நடத்துவதற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் சீரிய முயற்சியில், ராஜன் செல்லப்பா தலைமையிலும் இந்த இடத்தை தேர்வு செய்து ஆரம்பப் பணிகளை வாகன நிறுத்தங்கள் போன்ற வசதிகளை ஆய்வு செய்கிறோம். பழனியில் அண்ணா காலத்தில் திமுக மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டை பற்றி தான் பேசுவார்கள் அன்று ஊடகங்கள் கிடையாது, எஸ்.எஸ்.ராஜேந்திரனின் திரைப்படத்தில் கூட அந்த மாநாட்டை பற்றி விளம்பரப்படுத்தப்பட்டது. அந்த அளவிற்கு மதுரையில் மாநாடு நடைபெற உள்ளது. உருவங்கள் தான் ஒன்றே தவிர எங்கள் எண்ணங்கள் ஒன்றாக தான் உள்ளது. எல்லோரும் பாராட்டுகின்ற அளவுக்கு இந்த மாநாடு நடைபெற வேண்டும். வருகிற 2024 தேர்தலில் வெற்றிப்படியாகவும், 2026 இல் ஆட்சி மாற்றத்தை கொண்டு வரும் மாநாடகவும் இது நிச்சயமாக அமையும்” என்றார்.
செங்கோல் கொடுத்ததில் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு அறிகுறி என்று அண்ணாமலை கூறி இருப்பது குறித்த கேள்விக்கு
காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு, அதுபோல அண்ணாமலைக்கு அவர்கள் கட்சி பெரியது, எங்கள் கட்சி எங்களுக்கு பெரிது, எங்கள் கட்சி வெல்ல எவனாலும் முடியாது. எல்லாரும் நீச்சல் அடிக்கலாம் கரை சேர்ந்தது அதிமுகவினர் தான்.
சட்ட விரோதமாக மது விற்பனையை தடுக்க சென்ற காவல் அதிகாரி மீது திமுகவினர் செருப்பு வீசிய விவகாரம் குறித்து கேள்விக்கு
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கேலிக்கூத்தாக இருக்கிறது. ஆளுங்கட்சி துணையோடு தான் சாராயம் போன்ற போதை பொருள் கடத்தல் எல்லாம் நடைபெறுகிறது. இலங்கைக்கு கோடிக்கணக்கில் போதை பொருள் கடத்தப்படுகிறது இரண்டு மாவட்டத்தில் மட்டும் 25 பேர் இறந்திருப்பது பெரிய கேவலம், இதுதான் திராவிட மாடல். திராவிட மாடல் என்றாலே கஞ்சா போதைக்கான மாடல்தான். காவல்துறை தலைமை அதிகாரிக்கு ஆளுங்கட்சியாக இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள் என்று முதல்வர் கூறினால், தமிழகத்தில் எந்த மூளை முடுக்கிலும் போதைப் பொருள் இருக்காது. தன் கட்சிக்காரர் தான் போதைப்பொருள் விற்று சம்பாதிக்கிறார்கள் என்று முதல்வருக்கு தெரியும், டாஸ்மாக்கிலேயே இன்று கலர் சாராயம் விற்கப்படுகிறது என்று பேசப்படுகிறது. எந்த காலத்திலும் திமுக ஆட்சிக்கு வந்தால் அது தமிழக மக்களுக்கு விரோதமான ஆட்சியாக இருக்கும்.
ஆளுநருக்கு தமிழக அரசுக்கும் உண்டான மோதல் குறித்த கேள்விக்கு
இரண்டு பக்கமும் தவறுகள் இருக்கிறது. ஆளுநர் ஒரு கட்சியின் பிரதிநிதி என்பதை வெளிக்காட்டும் அளவிற்கு சில பேச்சுகள் அமைகிறது, அவர் பேசுகிறாரா அறிக்கை வருகிறதா என்று தெரியவில்லை. அவர் பேசும் சில அரசியல் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. அதேசமயம் ஆளுநரை ஆளும்கட்சிகள் விமர்சனம் செய்வதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆளுநர் இல்லாமல் ஒரு அனுவும் அசையாது. அவர் அனுமதியோடு தான் எந்த திட்டங்களையும் நிறைவேற்ற முடியும். இவர்களுடைய மோதலினால் தமிழக மக்களுடைய நல்வாழ்வு தான் பாதிக்கும். இந்த சூழல் ஆளுங்கட்சிக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லதில்லை. இதனால் தான் புரட்சித்தலைவர் மற்றும் தலைவியும் அரசியல் கருத்துக்களில் மாறுபாடுகள் இருந்தாலும் மத்திய அரசை ஆதரித்தது தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக விட்டுக் கொடுத்து சென்றார்கள். மோடியா லேடியா என்றபோது தமிழக மக்கள் லேடி தான் என்று சொன்ன பிறகும் கூட, அகில இந்திய அளவில் மோடி தலைமையில் ஆட்சி அமைந்ததற்கு ஆதரவு கொடுத்தவர் புரட்சித்தலைவி அம்மா, எப்போது எல்லாம் தமிழக மக்களுக்கு நல்லது நடைபெறுகிறதோ அப்போது ஆதரிப்பார், விரோதமான செயலை மத்திய அரசு கொண்டு வந்தாலும் துணிவுடன் எதிர்ப்பார், காவிரி விவகாரத்தில் 48 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கிய வரலாறு அதிமுகவை சேரும், அதற்கு நாயகன் எடப்பாடியார் தான் என்று கூறினார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்