பாமக மகளிரணி சார்பில் தொடர்ச்சியாக 100 சட்டமன்ற தொகுதிகளில் உள்ளரங்க கூட்டம் நடத்தி 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பரப்பரையை மேற்கொள்வது தொடர்பாக பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி தலைமையில் பாமக மகளிரணி மாநில , மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை உத்தண்டியில் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
பாமக மகளிரணி நிர்வாகிகள் கூட்டம்:
மகளிரணி நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் என்பதால் கூட்டத்திற்கு வருகை தந்த பெண்களுக்கு மல்லிகை , ரோஜா உள்ளிட்ட மலர்கள் மற்றும் வளையல்கள் வழங்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவரான சௌமியா அன்புமணி கடந்த மக்களவைத் தேர்தலில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டதன் மூலம் முதல் முறையாக தேர்தல் அரசியலில் களம் கண்டிருந்தார்.
இந்நிலையில் முதல் முறையாக பாமக மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டத்தை தன்னுடைய தலைமையில் சௌமியா அன்புமணி கூட்டினார். சௌமியா அன்புமணி தலைமையில் 100 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற உள்ள உள்ளரங்க கூட்டங்களை எவ்வாறு நடத்துவது என கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
ஆலோசனைக் கூட்டத்தில் செளமியா அன்புமணி பேசியதாவது,
குடும்ப விழா:
இது ஒரு குடும்ப விழா . எனவேதான் பூக்கள் கொடுத்தும் வளையல் கொடுத்தும் உங்களை வரவேற்றோம். உங்க அண்ணன்தான் ( அன்புமணிதான்) பேப்பர் , துண்டுச் சீட்டு என எதுவுமே இல்லாம மேடையில பேசுவார். என்னால அப்படியெல்லாம் முடியாது.
போதைப் பழக்கம் அதிகரித்து வருகிறது. வயதானோர் மதுவுக்கும் , சிறுவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைக்கும் அடிமையாகி வருகின்றனர். போதைப் பழக்கம் இல்லாத நல்ல ஆண் பிள்ளைகளை கண்டறிந்து நம் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பது சவாலாகி வருகிறது
ஆதரவாக இருக்க வேண்டும்:
காவல்துறை , நீதித்துறை மருத்துவத்துறை இணைந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண் குழந்தைகளுக்கு , பெண்களுக்கு உடனடியாக தண்டனையை பெற்றுத்தர வேண்டும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பிறகு நீதிமன்றம் சென்று நீதியை பெறும் பெண்களை வீராங்கனைகள் என கூற வேண்டும். அவர்களது துணிச்சலே தவறிழைத்தோருக்கு தண்டனை கிடைக்க காரணம். அது போன்ற பெண்களுக்கு நாம் ஆதரவாக இருக்க வேண்டும்
கல்வி , வேலைவாய்ப்பு , மருத்துவம் இலவசமாக வழங்கப்பட வேண்டும். பல காவல்நிலையங்களில் போதுமான காவலர்கள் இல்லை. சில இடங்களில் இரண்டு காவலர்கள்தான் இருக்கின்றனர். அவர்கள் காவல் நிலையத்தை பூட்டிவிட்டுதான் புகார் குறித்து விசாரிக்க செல்லும் நிலை பல இடங்களில் உள்ளது.
பாமக உள்ளரங்க கூட்டம்:
2004ம் ஆண்டுக்கு பிறகு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்பட அன்புமணி சுகாதாரத்துறை அமைச்சராக இருந்ததுதான் காரணம். தேர்தல் நெருங்கும்போது கடைசி நேரத்தில் சென்று மாம்பழத்திற்கு வாக்களியுங்கள் என்று கூறக் கூடாது
தேர்தலுக்கு முன்பே போதை உள்ளிட்டவற்றுக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டங்களை மகளிரணியினர் கிராம அளவில் நடத்த வேண்டும். பாடல் , நடனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாமக சார்பில் உள்ளரங்க கூட்டங்கள் தொகுதி வாரியாக நடத்தப்பட வேண்டும்.
மன நோய்:
ஏன் அரைகுறையாக உடை உடுத்துகிறாய் ? ஏன் இரவு நேரத்தில் நண்பருடன் சென்றாய் ? தனியாக ஏன் செல்கிறாய் ? என பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணை நோக்கி கேள்வி கேட்பது ஒருவகையான மன நோய் போன்றது
தருமபுரியில் தேர்தலுக்கு பின் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்திற்கு சென்றபோது ஆண்கள் பலர் கண்ணீரோடு நின்றனர். ஆனால் பெண்கள்தான் எனக்கு ஆறுதல் கூறி தைரியமாக இருக்க சொன்னார்கள்.
மனம் மாறிய பெண்கள்:
தருமபுரியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது ஆண்கள் சரியாக வாக்களித்து விடுகின்றனர் , பெண்கள்தான் கடைசி நேரத்தில் மனம் மாறி மாற்று கட்சிகளுக்கு வாக்களித்து விடுகின்றனர் என்று ஒரு சிறிய பெண் என்னிடம் கூறினார்.
தேர்தலுக்கு பின் வாக்குப்பதிவு நிலவரங்களை எடுத்து பார்த்தபோது அது உண்மை என்பது தெரியவந்தது. பல ஊர்களில் வாக்குகள் குறைவாக பதிவாகி இருந்த நிலையில் நிர்வாகிகளே அதிர்ச்சி அடைந்தனர்.
தமிழக அரசு ஆயிரம் ரூபாய் கொடுப்பது எத்தனை நாள் அவர்களுக்கு உதவும்? நல்ல திட்டங்கள்தான் பெண்களுக்கு உதவும் என பெண்களுக்கு நிர்வாகிகள் எடுத்து கூற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.