Rahul Gandhi Speech About Hindus: கடந்த ஜூலை 1 ஆம் தேதி, மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியது பெரும் பேசு பொருளாகியது. அப்போது நீட் விவகாரம், வேலைவாய்ப்பு, மணிப்பூர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை மேற்கோள்காட்டி, பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார் ராகுல் காந்தி. இதற்கு, பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சர்ச்சையான ராகுல் பேச்சு:
அப்போது பேசிய ராகுல் காந்தி, சிவனின் புகைப்படத்தை காண்பித்து, இது வன்முறையின் சின்னம் இல்லை, அகிம்சையின் சின்னம். சிவபெருமான், பாபா குரு நானக் மற்றும் இஸ்லாத்தின் போதனைகள் நாட்டை வடிவமைத்த நம்பிக்கைகள் ஆகும். இவை அகிம்சையை ஆதரிக்கின்றன. ஆனால், அச்சப்படக் கூடாது எனவும் போதிக்கிறது.
ஆனால், ஆளுங்கட்சி வன்முறையை ஊக்குவிக்கிறது. அவர்கள், இந்துக்களே இல்லை என்றார்.
பாஜக எதிர்ப்பு:
ராகுல் காந்தியின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பிரதமர் மோடி, "முழு இந்து சமூகத்தையும் வன்முறையாளர்கள் என அழைப்பது கவலை அளிக்கிறது" என்றார். இதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, "மோடி, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியோர் மட்டுமே இந்துக்கள் இல்லை என தெரிவித்தேன். அவர்களுக்கு எதிராக மட்டுமே நான் கருத்து கூறினேன்" என தெரிவித்தார்.
மக்களவையில் நடந்த விவாதமானது, சமூக வலைதளங்களில் வெளியாகி விமர்சனங்கள் எழ ஆரம்பித்தது. இந்துக்களை வன்முறையாளர்கள் என ராகுல் தெரிவித்துவிட்டார் என பாஜகவினர் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தனர்.
ராகுலுக்கு ஆதரவாக சங்கராச்சாரியார்.
இதுகுறித்து, ஜோதிர் மடத்தின் 46வது சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்தா கருத்து தெரிவித்துள்ளார். இந்துக்களை வன்முறையாளர்கள் என ராகுல் காந்தி கூறவில்லை. அவ்வாறு கூறியதாக பரவி வரும் தகவல் உண்மையில்லை. இந்துக்கள் என கூறிக் கொள்ளும் சிலரைத்தான், அவ்வாறு கூறினாரே தவிர, இந்துக்கள் அனைவரும் வன்முறையாளர்கள் என கூறவில்லை. இந்து மதம் வன்முறையை நிராகரிக்கிறது என்றும் ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.
ராகுல் காந்தியின் பேச்சின் சில பகுதிகள் மட்டும், பரப்பப்படுகிறது. இவ்வாறு பரப்புபவர்களைத்தான் முதலில் தண்டிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேச்சுக்கு சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்தா கருத்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ராகுல்காந்திக்கு ஆதரவாக சங்கராச்சாரியாரின் கருத்தானது, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Also Read: "நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!