விக்கிரவாண்டி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தவர் புகழேந்தி. இவர் உடல்நலக்குறைவால் திடீரென கடந்த ஏப்ரல் மாதம் காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஓய்ந்தது பரப்புரை:
இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே விக்கிரவாண்டியில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டது. இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானது முதலே அரசியல் கட்சிகள் விக்கிரவாண்டியில் தேர்தல் பணியில் தீவிரமாக களமிறங்கின.
இடைத்தேர்தல் நாளை மறுநாள் நடைபெற இருப்பதால் வேட்பாளர்கள் தங்களது பரப்புரையை 8ம் தேதி மாலை 6 மணியுடன் முடித்துக் கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, தேர்தல் ஆணைய உத்தரவின்படி விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான பரப்புரை ஓய்ந்தது. பரப்புரைக்கு கடைசி நாள் என்பதால் பிரதான வேட்பாளர்களான தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் அன்புமணி மற்றும் நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா தீவிரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர். அவர்கள் மட்டுமின்றி அவரது கட்சியின் நிர்வாகிகளும், ஆதரவாளர்களும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். குறிப்பாக, கடைசி நாளான இன்று தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக உதயநிதி ஸ்டாலின், பா.ம.க. வேட்பாளருக்கு ஆதரவாக அன்புமணி ராமதாசும், நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக சீமானும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
தி.மு.க. - பா.ம.க. - நாம் தமிழர் போட்டி:
இந்த தேர்தலில், யாரும் எதிர்பாராத வகையில் அ.தி.மு.க. போட்டியிடாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்தார். இதனால், இந்த தேர்தலில் தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் ஆகிய கட்சிகளே பிரதான கட்சிகளாக களமிறங்குகிறது. அதுவும் குறிப்பாக, தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவிற்கும், பா.ம.க. வேட்பாளர் அன்புமணிக்கும் இடையே நேரடி போட்டியாக இந்த தொகுதியில் இருக்கும் என்று கருதப்படுகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் 8 சதவீத வாக்குகளைப் பெற்றதால் நாம் தமிழர் கட்சியும் இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
விக்கிரவாண்டி சட்டசபைத் தொகுதியைப் பொறுத்தமட்டில், மொத்தம் 2 லட்சத்து 33 ஆயிரத்து 901 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 15 ஆயிரத்து 608 பேர் ஆவார்கள். பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 18 ஆயிரத்து 268 வாக்காளர்கள் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 25 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம்:
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரையில் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக பரப்புரையில் ஈடுபட்டார். தி.மு.க.விற்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தி.மு.க. தலைவர்கள் பரப்புரையில் ஈடுபட்டனர். இவர்கள் மட்டுமின்றி கூட்டணி கட்சித் தலைவர்களும் இந்த பரப்புரையில் ஈடுபட்டனர்.
பா.ம.க.விற்கு ஆதரவாக அன்புமணி ராமதாஸ் பரப்புரையில் ஈடுபட்டார். நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக சீமான் வாக்குசேகரித்தார். தி.மு.க.விற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தவர்கள் தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் மற்றும் மக்களவைத் தேர்தலின் வெற்றியை கூறி வாக்கு சேகரித்தனர். பா.ம.க. மற்றும் நாம் தமிழர் கட்சியினர் தி.மு.க. அரசு மீதான விமர்சனங்களை முன் வைத்து வாக்கு சேகரித்தனர். இந்த தேர்தல் பரப்புரையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் முக்கிய விவாத பொருளாக மாறியது.
பலத்த போலீஸ் பாதுகாப்பு:
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. அதேபோல, ஆம்ஸ்ட்ராங் கொலையும் இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்றுடன் பரப்புரை முடிந்துள்ளதால், தொகுதிக்கு தொடர்பு இல்லாத நபர்கள் தொகுதியை விட்டு வெளியேறி வருகின்றனர். அதேபோல, வாக்குப்பதிவிற்காக விக்கிரவாண்டி தொகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.