மத்திய பல்கலைக்கழகங்களில் பொது நுழைவுத் தேர்வு நடத்துவதை எதிர்த்து கொண்டுவரப்பட்ட தனி தீர்மானத்திற்கு எதிராக பாஜக வெளிநடப்பு செய்தது.
மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கு நுழைவுத் தேர்வு கட்டாயம் என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதை ரத்து செய்ய வலியுறுத்தியும் சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, பேசிய சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நாடு முழுவதும் மொத்தம் 49 மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளது என்றும், இதில் தமிழ்நாட்டின் முதலமைச்சரின் சொந்த ஊரான திருவாரூரில் ஒரு பல்கலைக்கழகம் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தேர்வு நடந்து முடிந்துவிட்டது என்றும், அதே போல கேரளாவின் காசர்கோடில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்திலும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. சிபிஎம் அரசாங்கமும் அதை எதிர்க்கவில்லை. ஆனால் தமிழ்நாடுதான் எதிர்க்கிறது என்று கூறினார்.
மேலும், இந்த தேர்வு கட்டாயமல்ல, மாநில அரசு விரும்பினால் நடத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். இதனை உடனடியாக மறுத்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “முதலில் நீங்கள் இப்படித்தான் சொல்வீர்கள் ஆனால் பிறகு கட்டாயம் என்று கூறுவீர்கள். ஆகவே நுழைவுத் தேர்வு வேண்டியதில்லை” என திட்டவட்டமாக கூறினார்.
இதனையடுத்து வெளிநடப்பு செய்த பாஜகவினர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய நயினார் நாகேந்திரன், “முதலமைச்சரால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்துள்ளோம். மாநில அரசின் பல்கலைக்கழகங்கள் விரும்பினால் சேர்த்துக்கொள்ளலாம் என்றே கூறப்பட்டுள்ளது.” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “மத்திய அரசு, மாநில அரசுக்கு எதிரானது போன்ற பிரமையை ஏற்படுத்தி வருகின்றனர். 2 வயது குழந்தையிலிருந்து செல்போன் பயன்படுத்துகிறார்கள். இதுபோன்ற சூழலில் முட்டுக்கட்டை போடுவதை மாநில அரசு நிறுத்த வேண்டும். ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்வி நிலையங்களில் தேசிய அளவில் நுழைவுத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றது.” என்று கூறினார்.
நாடு முழுவதும் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு கட்டாயம் என்று பல்கலைக்கழக மாணியக் குழு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு மாணவர் சங்கத்தினர், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
ஆனாலும் மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு ஜூலை முதல் வாரத்தில் நடைபெறும் என்று மாணியக் குழு தலைவர் ஜெகதேஷ் குமார் அறிவித்திருந்தார். இந்த தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி என 13 மொழிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்