தமிழகம் முழுவதும் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா‌ இரண்டாம் கட்ட ஆன்மீக சுற்றுப்பயணமாக இன்று மாலை சேலம் வர உள்ளார். கடந்த மாதம் முதற்கட்டமாக தென்தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களுக்கு ஆன்மீக சுற்றுப் பயணம் மேற்கொண்டா சசிகலா, இந்த முறை மேற்கு மாவட்டங்களான  சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற முக்கிய திருக்கோவில்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். 



சசிகலா தரப்பில் ஆன்மீகச் சுற்றுப் பயணம் என்று சொல்லப்பட்டாலும் பல்வேறு இடங்களில் உள்ள அதிமுக தொண்டர்களை நேரடியாக சந்திக்க உள்ளார். குறிப்பாக முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் இருந்து தனது பயணத்தை தொடங்கும் சசிகலா, அவரை சந்தித்த அல்லது தொலைபேசியில் பேசிய தொண்டர்களை அக்கட்சியில் இருந்து பலர் நீக்கப்பட்டுள்ளனர். மேலும், இன்று அதிமுகவில் முக்கிய பொறுப்புகளில் இருந்த நிர்வாகிகள் பலர் சந்திக்க வாய்ப்பு வாய்ப்புள்ளதால் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பேரதிர்ச்சி காத்திருப்பதாக அதிமுகவினர் பேசி வருகின்றனர். சமீபத்தில் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த, எடப்பாடி பழனிசாமி, சசிகலாவின் சேலம் வருகை அவர் திமுகவிற்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. அவரைக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று கூறினார். இருப்பினும் பல இடங்களில் சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளர் வெற்றி குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்துகின்றது.



இது ஒருபுறமிருக்க சசிகலாவை வரவேற்பதற்கு சேலம் மாநகராட்சியில் திரும்பும் இடமெல்லாம் சுவரொட்டிகளை சசிகலாவின் ஆதரவாளர்கள் ஒட்டி உள்ளனர். அதிலும் குறிப்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சசிகலாவிற்கு கிரீடம் அணிவிப்பது போல புகைப்படம் இடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் மூன்றாவது பெண் முதல்வராக சசிகலா வரவேண்டும் என்று தொண்டர்கள் விருப்பப் படுகின்றனர் என்ற வாசகத்துடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. சில இடங்களில் சசிகலாவின் சுவரொட்டிகள் அடையாளம் தெரியாத நபர்களால் பிரிக்கப்பட்டுள்ளது.



இரண்டு நாள் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சசிகலா, இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வருகை தருகிறார். திருச்சியில் சில கோவில்களில் தரிசனம் செய்துவிட்டு பின்னர் முசிறி, தொட்டியம், நாமக்கல் வழியாக சேலம் வருகிறார். சேலத்தில் எடப்பாடியில் உள்ள அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோவிலுக்கு செல்லும் சசிகலா, அங்கிருந்து சேலம் சின்னக்கடை வீதி பகுதியிலுள்ள அருள்மிகு ராஜகணபதி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளார். நாளை காலை தாரமங்கலத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அங்கிருந்து மேச்சேரி செல்லும் சசிகலா மேச்சேரி பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளார். பின்னர் அங்கிருந்து மேட்டூர், அந்தியூர், சத்தியமங்கலம் வழியாக கோவை சென்றடைகிறார்.