அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆகஸ்ட் 1ஆம் தேதி விசாரணைக்கு வரும்போது, இரு தரப்பும் ஒரு மணி நேரத்திற்குள் வாதங்களை முடிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


ஏற்கனவே நேற்று அதாவது ஜூலை 26ஆம் தேதி விசாராணைக்கு வந்த இந்த மனு மீதான விசாராணையை இன்று ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம், இன்றும் விசாரணை முழுவதும் முடியாததால் வரும் ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆகஸ்ட் 1ஆம் தேதி விசாரணைக்கு வரும்போது இரு தரப்பிலும் வாதத்தை ஒரு மணி நேரத்தில் முடிக்க அறிவுருத்தியுள்ளார். 


அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்பட்டு அவரது வீட்டில் அமலாக்கத்துறை சோதனையை நடத்தியதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அப்போது ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக ஜூன் 21 ஆம் தேதி அவருக்கு இதய அறுவை சிகிச்சை காவேரி மருத்துவமனையில் நடைபெற்றது.


இதனிடையே, அமலாக்கத்துறை அவரை கைது செய்ததை தொடர்ந்து, செந்தில் பாலாஜி மனைவியின் தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. முதலில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது அதில் இரு நீதிபதிகளின் தீர்ப்பு மாறுபட்டு இருந்ததால், 3 வது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. இந்த மனு மூன்றாவது நீதிபதி சி.வி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, “ கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது. விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.  தான் குற்றம் செய்யவில்லை என்பதை விசாரணை நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும். கைது செய்யப்பட்டால் கஸ்ட்டடியில் எடுக்க வேண்டியது அவசியம்” என கூறினார். மேலும் செந்தில் பாலாஜியின் சிகிச்சை முடிந்ததும் காவலில் எடுக்கலாம் எனவும், அதேபோல் சிகிச்சை நாட்களை நீதிமன்ற காவல் நாட்களாக கருத முடியாது” என குறிப்பிட்டு தீர்ப்பை வழங்கினார்.


இதையடுத்து, செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்பட வேண்டும் என்றும், அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை நேற்றும் இன்றும் விசாரித்த உச்சநீதிமன்றம் விசாரணையை வரும் ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. மேலும், இருதரப்பினருக்கும் வாதங்களை இழுத்துக்கொண்டு போகாமல் ஒரு மணி நேரத்தில் முடிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.  இதனால் வரும் ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி செந்தில் பாலாஜி வழக்கு முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.