அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் வலியுறுத்தி வந்த நிலையில், தேவர் ஜெயந்தியை முன்னிட்டு இருவரும் ஒரே காரில் பயணம் செய்வது பேசுபொருளாக மாறியுள்ளது.
ஓபிஎஸ், செங்கோட்டையன் ஒரே கார் பயணம்
மதுரையில் இருந்து ஒரே காரில் கேஎஸ்சும் ஓபிஎஸ்ஸும் பசும்பொன்னை நோக்கிச் செல்கின்றனர். முன் சீட்டில் ஓபிஎஸ்ஸும் பின் சீட்டில் செங்கோட்டையனும் அமர்ந்துள்ள காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இவர்களுடன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு, அமமுகவைத் தொடங்கிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் இணைவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
ஒன்றிணையும் மூவர் கூட்டணி
அதாவது பசும்பொன்னில் ஓ.பன்னீர் செல்வம், கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேவருக்கு அஞ்சலி செலுத்துவர் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து மூவரும் இணைந்து சசிகலாவைச் சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பின்னணி என்ன?
அதிமுகவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியதால், கட்சியில் இருந்து டிடிவி தினகரன் முதலில் நீக்கப்பட்டார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ்ஸை நீக்கினார். இதற்கிடையே அண்மையில் பிரிந்தவர்களை ஒருங்கிணைத்து வலிமையான அதிமுகவை உருவாக்க வேண்டும் என்று பேசிய செங்கோட்டையனின் கட்சிப் பொறுப்புகள் அனைத்தையும் பறித்தார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
முத்துராமலிங்கத் தேவரின் 118-வது பிறந்த நாள் மற்றும் 63ஆம் குருபூஜை இந்த ஆண்டு அனுசரிக்கப்படுகிறது. இதை ஒட்டி, பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மரியாதை செலுத்தினார்.
அதேபோல மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பசும்பொன்னில் தேவர் திருமகனார் பெயரில் ரூ.3 கோடி மதிப்பில் திருமண மண்டபம் அமைக்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தேவர் ஜெயந்தி அன்று கட்சிப் பாகுபாடு இல்லாமல், பெரும்பாலான அரசியல் தலைவர்கள் அவரின் சிலைக்கு ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.