விசிக தலைவரும், மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் தனியார் செய்தி நாளிதழுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, 

Continues below advertisement


அதிமுக - பாஜக உறவு:


ஜெயலலிதா மறைவிற்கு பிறகு மாநிலத்தின் இரண்டாவது பெரிய கட்சியான அதிமுக-வை பலவீனப்படுத்தும் முயற்சியில் பாஜக உள்ளது. மகாராஷ்ட்ராவில் செய்தது போல செய்ய முயற்சிக்கின்றனர். ஒருவேளை அதிமுக தொடர்ந்து பாஜக-வுடன் கூட்டணி வைத்துக் கொண்டிருந்தால் அவர்கள் 3வது இடத்திற்கு செல்லும் நிலை உருவாகலாம். அதனால், பாஜகவிடம் இருந்து அதிமுக விலகியிருந்தால் நன்றாக இருக்கும்.


விஜய்யின் தலைமை:


திமுக-வின் சிறுபான்மையினர் வாக்குகளை பிரிக்க விஜய்யை ஒரு கருவியாக பாஜக பார்க்கிறது. இதன்மூலம் ஆளுங்கட்சியை பலவீனப்படுத்த பார்க்கிறார்கள். விஜய்யின் வருகை திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் சவாலானதாக இருந்தாலும் அதிமுகவிற்கே அதிக இழப்பு ஆகும். இதனால், அவர்கள் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 


விஜய்யின் செல்வாக்கு எம்ஜிஆர், செல்வாக்கு உருவாக்கிய வாக்கு வாங்கியை விழுங்கலாம். விஜய்யின் செல்வாக்கு மறுக்க முடியாதது.  ஆனால், கரூர் துயர சம்பவம் அவரது தலைமைப் பண்பு குறித்து வலுவாக கேள்வி எழுப்பியுள்ளது. தலைமைப் பண்பு என்பது நெருக்கடிகளை திறம்பட கையாள்வதில்தான் உள்ளது. அவரது செயல்பாடுகள் அதிருப்திக்கும் மேல் ஏமாற்றத்தை உண்டாக்கியது.  அவரது அரசியல் வாழ்வில் அது ஒரு கறை. அது அவரை தொடர்ந்து வேட்டையாடும்.


சமூக களங்கம்:


சிலரால் தலித் இயக்கங்கள் மூன்று தசாப்தங்களாக இருப்பதையும், அவர்கள் அரசியலில் வளர்வதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும், திமுக-வை வெறுப்பவர்கள் நாங்கள் திமுக-வுடன் கூட்டணி வைத்திருப்பதால் எங்களையும் விமர்சிக்கிறார்கள். 


ஒவ்வொரு சூழ்நிலையிலும் நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். ஆனால் மற்றவர்களைப் போல அல்லாமல், நாங்கள் தொடர்ச்சியான சமூக களங்கத்தை எதிர்கொள்கிறோம். அம்பேத்கரின் சித்தாந்தத்துடனும், தலித் இயக்கத்துடனும் நாங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளோம். 


திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளில் கூட, பல்வேறு சமூக மற்றும் சாதி பின்னணிகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். தொகுதி பங்கீட்டில் இது சிறு உரசலை ஏற்படுத்தியது.


இவ்வாறு அவர் பேசினார்.


நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய பிறகு முதன்முறையாக அவர் வெளிப்படையாக கூட்டணிக்கு அழைப்பு விடுத்தது விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனையே ஆகும். ஆனால், திருமாவளவன் விஜய்யின் கூட்டணிக்கு சம்மதம் தராமல் திமுக கூட்டணியிலே தேர்தல் வரை பயணிப்பதை உறுதி செய்துள்ளார். தனது அரசியல் பயணத்தை விறுவிறுப்பாக்கிய விஜய், கடந்த மாதம் 27ம் தேதி கரூரில் நடந்த தவெக பரப்புரையில் அவரைப் பார்க்க வந்த ரசிகர்கள் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கிய சம்பவத்தால் ஸ்தம்பித்து போனார். அதன்பின்பு, கடந்த ஒரு மாதமாக தவெக மிகவும் அமைதியான நிலைக்குச் சென்றது. 


நேற்று முன்தினம் கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரத்திற்கே நேரில் வரவழைத்து விஜய் சந்தித்து ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.