தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு சட்டமன்ற குழு தலைவராக உள்ள செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த கே.எஸ். அழகிரி நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காங்கிரஸ் கமிட்டி தலைமையின் இந்த முடிவு அதிரடியாக பார்க்கப்படுகின்றது.
செல்வப்பெருந்தகை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால், செல்வப்பெருந்தகை வகித்து வந்த காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் பொறுப்பு கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஸ்குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக செல்வப்பெருந்தகை, தான் மிகவும் ஆச்சரியத்தில் உள்ளதாகவும், இதனை தான் எதிர்பார்க்கவில்லை என்றும், தொடர்ந்து கட்சிப்பணி ஆற்றுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
கசிந்த தகவல் உண்மையா?
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்க முடிவு செய்யப்பட்டுவிட்டதாகவும், மூத்த தலைவர்கள் பலரின் அழுத்தத்தால் அறிவிப்பு வெளியாகமல் இருப்பதாக தகவல்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கசிந்தது. அப்போது இது தொடர்பாக செல்வப்பெருந்தகையிடம் ஊடகங்கள் கேட்டபோது, கட்சி மேலிடம் என்ன சொன்னாலும் அதற்கு கட்டுப்பட்டு கட்சிப் பணியாற்றுவேன் எனக் கூறியிருந்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக கே.எஸ். அழகிரி நியமிக்கப்பட்டார். இந்நிலையில் 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பு யாருக்கு வழங்கலாம் என காங்கிரஸ் மேலிடம் யோசித்து வந்த நிலையில், பொறுப்பை ஒரு தலித் சமூகத்தை சார்ந்தவருக்கு கொடுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிஹார்ஜுனா கார்கே கூறிவந்ததாக கூறப்பட்டது. ஆனால் காங்கிரஸ் மேலிடத்தின் பார்வையில் மொத்தம் 3 பேர் இருந்ததாக கூறப்படுகின்றது. அதாவது, கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக இருந்த செல்வப்பெருந்தகை ஆகியோர் இருந்ததாக கூறப்படுகின்றது.
செல்வப்பெருந்தகையின் அரசியல் பயணம் குட்டி ரீவைண்ட்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செல்வப்பெருந்தகை முதலில் தனது அரசியல் பயணத்தை மறைந்த ஜெகன் மூர்த்தியின் புரட்சி பாரதம் கட்சியில் தொடங்கினார். அதன் பின்னர் அங்கிருந்து மருத்துவர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சிக்குச் சென்றார். அங்கும் தலைமையிடம் உரசல் ஏற்படவே அங்கிருந்து முனைவர் தொல். திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குச் சென்றார். விசிகவில் இருந்தபோதுதான் முதன் முதலில் சட்டமன்ற உறுப்பினரானார். அதன் பின்னர் விசிகவில் இருந்து பகுஜன் சமாஜ் கட்சிக்குச் சென்றார். அங்கிருந்து காங்கிரஸ் கட்சிக்கு வந்தவருக்கு, தமிழ்நாடு எஸ்.சி/எஸ்.டி பிரிவு தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. அதன் பின்னர் காங்கிரஸில் தனக்கென ஆள் பலத்தை ஏற்படுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் தவிர்க்க முடியாதவராக மாறியுள்ளார்.