செம்பரம்பாக்கம் அணைத் திறப்பின்போது தன்னை அழைக்காத நீர்வளத்துறை அதிகாரிகளிடம் காட்டமாக பேசினார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வபெருந்தகை. குறிப்பாக, நீர்வளத்துறையில் சாதி தலைவிரித்து ஆடுவதாகவும், துறையில் அயோக்கியன்  அமர்ந்துகொண்டு கொட்டம் அடிப்பதாகவும் அவர் பேசியது துறையை தாண்டி அரசியல் களத்திலும் அனலை கிளப்பியிருக்கிறது.

Continues below advertisement

செல்வபெருந்தகை சொல்வது மாதிரி நீர்வளத்துறையில் என்ன நடக்கிறது என்பதை களத்தில் இறங்கி விசாரித்தோம். கிடைத்த தகவல்கள் எல்லாம் பகீர் ரகம். சாதியை அடிப்படையாக வைத்து நியனமங்கள், உயர் பதவிகள், கோடிகளில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் பகுதிக்கு ஒரு குறிப்பிட்ட சாதியை சேர்ந்த பொறியாளர்கள் நியமனம் என நீர்வளத்துறையே அணையை உடைத்துக்கொண்டு வெள்ளம் சூழ்ந்த துறையாக மாறிக் கிடக்கிறது.

விதிகளை மதிக்காத செல்வகுமார் கண்காணிப்பு பொறியாளராக நியமனம்

Continues below advertisement

இது தொடர்பாக நீர்வளத்துறையின் முக்கிய பொறியாளர்கள் சிலரிடம் பேசினோம். அவர்கள் குறிப்பிட்ட பெயர்களில் இரண்டு பேர் முக்கியமானவர்கள். ஒன்று ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள், புகார்கள், முறைகேடுகள், அமலாக்கத்துறை வழக்குகள் என சந்தித்துக்கொண்டிருக்கும் அமைச்சர் துரைமுருகனுக்கு நெருக்கமானவராக அறியப்படும் பொதுப்பணித் திலகம். இவருக்கு விதிகளை மீறி சென்னை மண்டல தலைமை பொறியாளராக பதவி வழங்கப்பட்டதில் நீர்வளத்துறை பொறியாளர்கள் பலரும் கடும் அதிருப்தியிலும் கோபத்திலும் இருக்கிறார்கள். அந்த சூடே இன்னும் குறையாமல் இருக்கும் நிலையில், விதிகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு புதிதாக  பாலாறு வட்டத்தில் கண்காணிப்பு பொறியாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார் செல்வகுமார் என்பவர்.

யார் இந்த செல்வகுமார் ? நினைத்த பதவியில் அமர்ந்தது எப்படி ?

செல்வகுமார் கடந்த 2025 மே 2ஆம் தேதி வெளியிடப்பட்ட G.O (2D) No.15 (Water Resources A1 Dept )  அரசாணை வரிசை  எண் 51-ல் கண்காணிப்பு பொறியாளராக (Superintending Engineer) பதவி உயர்வு பெற்றார். அதனைத் தொடர்ந்து அவருக்கு Joint Chief Engineer (General) என்ற அடுத்தக் கட்ட பதவி உடனடியாக வழங்கப்பட்டது.  ஆனால், அவர் அந்த அரசாணையை மறுத்து, அரசு உத்தரவை பின்பற்றாமல் நான்கு மாதங்கள் விடுப்பில் சென்றுள்ளார். இதற்கு துறை ரீதியாக அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் அவருக்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு மீண்டும் அவரை சிலர் வரவைத்ததாக நீர்வளத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசாணையை மதிக்காத அதிகாரி – நடவடிக்கை எடுக்காத செயலாளர்

பொதுவாக ஒரு அரசு அதிகாரி தனக்கு வழங்கப்பட்ட பதவியை ஏற்க மறுப்பது கடுமையான ஒழுங்கு மீறல் என கருதப்படும் நிலையில், செல்வகுமாருக்கு மட்டும் நீர்வளத்துறையில் விலக்கு அளிக்கப்பட்டு, 2025 அக்டோபர் 16ஆம் தேதி வெளியிடப்பட்ட G.O.(D), No.143 (Water Resources A2 Dept) மூலம் நேரடியாக பாலாறு வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளராக (Superintending Engineer, Palar Basin Circle, Chennai) நியமிக்கப்பட்டுள்ளார்.  ஆனால், அவருக்கு இணை தலைமை பொறியாளர் என்ற இதைவிட உயர் பதவி கொடுக்கப்பட்டும், அது அலுவலக பதவி என்பதால் அதை பெற மறுத்து பாலாறு வடிநில வட்ட கண்காணிப்பாளராக பதவியை தன்னுடைய தனித்திறமையால் பெற்றிருக்கிறார் செல்வகுமார். இந்த நியமனத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும் துறை செயலாளரான ஜெயகாந்தனும் நேரடியாக தலையிட்டு செல்வகுமாருக்கு இந்த நியமனத்தை ஏற்படுத்திக்கொடுத்துள்ளதாகவும், சாதி, மத, இன வேறுபாடுகள் இன்றி செயலாற்ற வேண்டிய அரசு துறையில் ஒரு சிலருக்கு மட்டும் முக்கியமான பதவிகள் வழங்கப்பட்டு வருவதாக நீர்வளத்துறையின் பொறியாளர்கள் கொதித்துப்போய்வுள்ளனர். குறிப்பாக, இதுபோன்ற நியமனங்களில் துறையின் வழக்கமான முறைமைகள் மீறப்பட்டு, சிலர் ‘அதிகப்பட்ச ஏலம்’ போன்ற அணுகுமுறையில் பதவிகள் வழங்கப்படுவதாகவும் அதிலும் குறிப்பிட்ட ஒரு சாதியினருக்கே முக்கியத்துவம் தரப்பட்டு வருவதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

செல்வகுமார் பாலாறு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட பகீர் பின்னணி

இத்தகைய திடீர் நியமனங்களுக்கு என்ன பின்னணி என்று விசாரித்தால், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியே வருகின்றன. குறிப்பாக, சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான JICA (Japan International Corporation Agency) இணை நிதி திட்டங்களும், திருப்போரூர் அருகே உருவக்கப்படும் புதிய அணைத் திட்டமும்தான் முக்கிய காரணம் என்கிறார்கள் துறையின் முக்கிய நிர்வாகிகள். இந்த இரு திட்டங்களுக்கும் நேரடியாக பாலாறு வட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படவுள்ளது. அதனால், இந்த பகுதியின் நிர்வாக பொறுப்பை தனது நம்பிக்கைக்குரிய நபரிடம் ஒப்படைப்பதே சரியாக இருக்கும் என்று நினைத்த துறையின் அமைச்சர், செயலாளர் உள்ளிட்டோர் இதற்கு செல்வகுமாரை தேர்வு செய்து வானளாவிய அதிகாரம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒரே சாதியினருக்கு முக்கியத்துவம் – களையெடுப்பாரா முதல்வர் ?அதே நேரத்தில் நீர்வளத்துறையின் முக்கிய பொறுப்புகளில் – குறிப்பாக சென்னை மண்டல தலைமை பொறியாளர், பாலாறு வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர், காஞ்சிபுரம் செயற்பொறியாளர் போன்ற கோடிகளில் திட்டங்கள் கொண்டுவரப்படும் பதவிகளில் ஒரே சமூகத்தை சேர்ந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பது முறைப்படி வெளிப்படைத்தன்மையை மீறியதுடன், ஆதிக்கம் துறையில் வெளிப்படுவதாக துறையின் பொறியாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இதைதான் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வபெருந்தகையையும் பட்டவர்த்தனமாக போட்டுடைத்துள்ளார்.

சாதி ஆணவத்தால் செல்வபெருந்தகை அழைக்கப்படவில்லையா ?

இப்படி ஒரே சாதியை சேர்ந்தவர்கள் ஒன்றாக உயர் பதவிகளில் நியமிக்கப்பட்ட காரணத்தினால்தான், பட்டியலினத்தை சேர்ந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வபெருந்கையை, அவர்கள் மதிக்காமல் செயல்பட்டு வருகின்றார்கள் என்றும் இதனை அவர் அறிந்ததால்தான் நாங்கள் எல்லாம் அணையை திறக்க கூடாது என்று நினைக்கின்றீர்களா ? என்று அவர் ஆவேச குரல் எழுப்பியதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சருக்கு நெருக்கடியை ஏற்படுத்த முயற்சிக்கும் நீர்வளத்துறை அதிகாரிகள்

நீர்வளத்துறையில் நிலவும் இத்தகையை போக்கு திமுக அரசுக்கும் சமூக நீதியை பேணி காத்துவரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் சங்கடத்தை ஏற்படுத்தும் என்றும் இதில் உடனடியாக தலைமைச் செயலாளர், உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் துறையின் பொறியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வபெருந்தகை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இது குறித்து விரிவாக பேசியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

துறை செயலாளர் ஜெயகாந்தன் ஐ.ஏ.எஸ் விளக்கம் என்ன ?

சாதி ரீதியிலான நியமனம், விதிகளை மீறிய பதவி, பாலாறு வட்டத்தில் செயல்படுத்தப்படவிருக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் திட்டங்களுக்காகதான் செல்வகுமார், அங்கு கண்காணிப்பு பொறியாளராக நியமிக்கப்பட்டாரா ? என்ற கேள்வியை எழுப்பி, நீர்வளத்துறை செயலாளர் திரு.ஜெயகாந்தன் ஐ.ஏ.எஸ் அவர்களிடம் விளக்கம் கேட்டோம்.

அதற்கு அவர், செல்வகுமார் ஏற்கனவே நியமிக்கப்பட்ட பதவி மற்றும் இடத்தில் உடல்நலக்குறைவு காரணமாக பணியாற்ற முடியாத சூழலை குறிப்பிட்டு கடிதம் எழுதியதாகவும், பருவ மழை காலங்களில் அவர் அங்கு பணியாற்ற இயலாத வகையில் அவரது உடல்நலன் இருந்ததாலும் அவரை பாலாறு வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளராக நியமித்ததாகவும் ஜெயகாந்தன் ஐ.ஏ.எஸ் விளக்கம் அளித்துள்ளார்.

நான் கேட்ட மற்ற கேள்விகள் எதற்கும் திரு.ஜெயகாந்தன் விளக்கம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  நீர்வளத்துறை என்பதே மழை உள்ளிட்ட பருவ காலத்தில் கவனமாக களத்தில் இறங்கி செயலாற்ற வேண்டிய முக்கிய துறைதான். பாலாறு வட்டத்தில் மட்டும் செல்வகுமாருக்கு பருவ காலம் வராதா என்ன ?