TVK Vijay Karur Stampede: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களை, சென்னை அடுத்த மகாபலிபுரத்தில் வைத்து விஜய் சந்திக்க உள்ளார்.
41 பேரின் குடும்பத்தினரை சந்திக்கும் விஜய்:
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை, தவெக தலைவர் விஜய் இன்று தனிப்பட்ட முறையில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளார். செப்டம்பர் 27ம் தேதி நடந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை, ஒரு மாதத்திற்குப் பிறகு விஜய் இன்று சந்திக்க உள்ளார். அதேநேரம், ஏற்கனவே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தவெக சார்பில், ரூ.20 லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது. சென்னை அடுத்த மகாபலிபுரத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சி தனிப்பட்ட முறையில் நடைபெற உள்ளதால், ஊடகங்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
41 பேர் பலியான கரூர் துயரம்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மாவட்ட வாரியாக, வார இறுதிகளில் பரப்புரை மேற்கொண்டு வந்தார். அந்த வகையில் கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி அன்று கரூரில் மக்களை சந்தித்தார் . அப்போது ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசல் காரணமாக பொதுமக்கள் மூச்சு திணறல் போன்ற பாதிப்புகளை எதிர்கொண்டு, 41 பேர் உயிரிழக்க, பலர் காயமடைந்தனர். முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கரூர் விரைந்து பொதுமக்களை நலம் விசாரித்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அஞ்சலியும் செலுத்தினர். தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு கட்சிக் கூட்டத்தில் இப்படியொரு மோசமான நிகழ்வு அரங்கேறியதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் மீது குவியும் விமர்சனங்கள்:
தன்னை காண வந்த 41 பேர் உயிரிழந்த சூழலிலும், அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூட கூறாமல், விஜய் சென்னை திரும்பியது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சமூக வலைதளத்தில் கூட இரண்டு நாட்களுக்குப் பிறகே இரங்கல் தெரிவிக்க, பல்வேறு தரப்பினரும் விஜயை கடுமையாக விமர்சித்தனர். மறுபுறம் திமுக, அதிமுக கட்சிகளை சேர்ந்தவர்கள் சம்பவம் நடந்த இடத்தில் மட்டுமின்றி, மருத்துவமனைகளிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வந்தனர். ஆனால், தவெகவினர் யாருமே களத்தில் இல்லாதது அந்த கட்சியின் மீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. நாட்கள் செல்ல செல்ல விஜய் கரூர் விவகாரத்தில் நிலையான மற்றும் தெளிவான முடிவு ஏதும் எடுக்காதது, எந்தவொரு கட்சியும் இதுவரை செயல்படாத விதமாக இருந்தது.
தவெகவின் குற்றச்சாட்டுகளும், விளக்கங்களும்..
கரூர் துயர சம்பவம் குறித்து கேட்டறிந்ததும் உடனடியாக அங்கு செல்ல விஜய் முற்பட்டதாகவும், ஆனால் அவர் அங்கு வந்தால் நிலைமை மோசமடையக்கூடும் என காவல்துறையினரே அறிவுறுத்தியதாகவும், தவெக சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதுபோக, பாதிக்கப்பட்டவர்களை கரூரிலேயே வைத்து பார்க்க விஜய் திட்டமிட்டு, அதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணிகளும் தொடங்கப்பட்டன. ஆனால், ஆளுங்கட்சியின் அழுத்தம் காரணமாக தங்களுக்கு யாரும் மண்டபங்களையும், அரங்குகளையும் ஒதுக்க முன்வரவில்லை என்றும் தவெக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இத்தகைய பல்வேறு விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் மற்றும் அதிருப்திக்கு மத்தியில் தான், பாதிக்கப்பட்டவர்களை விஜய் இன்று சந்திக்க உள்ளார். ஆனால், அவர்களது இடத்திற்கே சென்று பார்க்காததை காட்டிலும், சென்னைக்கு மொத்தமாக அழைத்து வந்து பார்ப்பது என்பது மோசமான முடிவு என, தவெக தரப்பினரே சமூக வலைதளங்களில் வேதனை தெரிவித்து வருகின்றனர்.