தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்துவரும் தி.மு.க., அரசை கண்டித்து மதுரை முனிச்சாலை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.,வுக்கு எதிராகவும், முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில்..,” தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் போதை பொருட்கள் கடத்தப்படுகிறது. தொண்டர்கள் தான் கழகத்தை உயிரோட்டத்தோடு வைத்துள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை கூறி நிறைவேற்றாத அரசின் செவிகளுக்கு எட்டும் வகையில் தான் அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டமும், போராட்டமும் நடைபெறுகிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள அவலநிலையால் தான் மக்கள் அலை அலையாய் அ.தி.மு.க., போராட்டத்திற்கு வந்துள்ளனர்.



 

தி.மு.க., அரசு மகளிர்க்கு ஆயிரம் ரூபாய், கேஸ் மானியம், கல்வி கடன் ரத்து, விலைவாசி உயர்வு எதையுமே செய்து தரவில்லை. கொத்தடிமைக்கு கொத்தடிமையாக முதல்வர் இருந்து கொண்டு நம்மையும் கொத்தடிமையாக வைத்துள்ளனர். சினிமாக்காரர்கள் தான் சோப்புக்கும், மற்றவைக்கும் மாடலாக வருகிறார்கள். முதல்வர் மாடல் எனக்கூறி அசிங்கப்படுத்துகிறார்கள். அ.தி.மு.க., ஆட்சியின் மின்சார கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிப்பதாக கூறிய முதல்வர் தற்போது 54% உயர்த்தியுள்ளார். சொத்துவரிக்கு வீட்டையே விற்கும் நிலை உள்ளதாக பேசிய ஸ்டாலின் இன்று சொத்துவரியையும் உயர்த்தியுள்ளார்.



தி.மு.க., ஆட்சியில் வீட்டு வரியை நினைத்தால் வீட்டையே விற்றுவிடலாமா என தோன்ற வைக்கிறது. முதல்வரோடு கூட்டணி வைத்துள்ளவர்கள் இன்றைக்கு பக்கவாத்தியம் வாசித்து கொண்டுள்ளனர். ஸ்டாலின் இருக்கும் வரை உதயசூரியன் தான் உதிக்கும் எனக்கூறுகிறார். உதயசூரியன் எரிக்கத்தான் செய்யும். மக்களுக்கு வெயிலை கொடுப்பதை போல ஆட்சியை கொடுத்து கொண்டுள்ளனர். தமிழக மக்கள் படும் துயரம் போதாதாம். புதுச்சேரியிலும் தி.மு.க., ஆட்சி என முதல்வர் கூறுகிறார். இங்கே நடக்கும் கொடுமைகள் போதாதா? கொடுமையிலும் கொடுமையாக புதுச்சேரி மக்களும் துன்பப்பட நினைக்கிறார். திருக்குவளை மு.கருணாநிதி குடும்பம் தான் தி.மு.க., தி.மு.க., ஸ்டாலினின் பிரைவேட் கம்பெனி போல மாறிவிட்டது. நாளை உதயநிதியின் பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது. மகனுக்கு பட்டாபிஷேகம் செய்வதால் ஸ்டாலின் அனைத்து வரிகளையும் ரத்து செய்ய வேண்டும். விலை வாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட பிரச்சினைகளை உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பின் போது முதல்வர் சரி செய்வேன் என ஞான உதயம் வந்து அறிவிக்க வேண்டும் என மீனாட்சியம்மனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்” என்றார். 

 



நாளைய தினம் உதயநிதிக்கு பட்டாபிஷேகம் செய்ய உள்ளார்கள். முன்பு மன்னராட்சி காலத்தில் இளவரசருக்கு பட்டாபிஷேகம் செய்யும் போது குறுநில மன்னர்களுக்கு வரி விலக்கு அளிப்பார்கள். அது போல உதயநிதி அமைச்சராக பதவியேற்பதை முன்னிட்டு சொத்து வரி, மின்சார கட்டணம், பால் விலை உள்ளிட்ட உயர்வுகளை ரத்து செய்து மக்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும். அதிகார தெம்பில், போதையில் இதையெல்லாம் ஸ்டாலின் செய்கிறார். சென்னை முதல் குடிமகளான மேயரை தொங்கவிட்டு முதல்வர் காரில் வசதியாக செல்கிறார். சர்வாதிகார ஆட்சி போல திமுக ஆட்சி உள்ளது. ஒரு நாள் இரவு பயணத்துக்கு லட்சக்கணக்கான தொகையை கொடுத்து ரயில் பயணம் செய்கின்றனர். மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கின்றனர்.  மகனுக்கு முடிசூட்டும் நிகழ்வால் ஸ்டாலின் மக்களுக்கு இனிப்பான செய்தியை கொடுக்கட்டும். பொங்கலுக்கு தரமான பொருட்களை அ.தி.மு.க., கொடுத்தது. தி.மு.க., அல்வா தான் மக்களுக்கு கொடுத்தது. வாயிலேயே அல்வா கிண்டும் ஆட்சியாக திமுக உள்ளது. இவ்வளவு பிரிவினைகள் வந்தும் அ.தி.மு.கவினர் கட்சி மாற மாட்டார்கள். புடம்போட்ட தங்கங்கள் அதிமுக தொண்டர்கள். தலைவர்கள், நிர்வாகிகள் மாறுவார்கள். ஆனால் அதிமுக தொண்டர்கள் ஒருபோதும் கட்சி மாற மாட்டார்கள். அதனால் தான் எம்.ஜி.ஆரை பெரியப்பா என பேசி பார்க்கிறார் ஸ்டாலின்" என்றார்.