புதிதாக எடுக்கவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் வடிவில் எடுக்கப்பட உள்ளதாக ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்ட தொடரின், மக்களவையில் உறுப்பினர் ஒருவர் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்வதற்கு மத்திய அரசு ஏதேனும் திட்டம் வைத்துள்ளதா? மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்புகளை நடத்தவும் மத்திய அரசிடம் திட்டம் உள்ளதா ? என எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்தா ராய், 2021ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கு 2018 மார்ச் மாதம் மத்திய அரசு ஒப்புதல் அளித்ததாகவும், ஆனால் அதற்கு பிந்தைய கொரோனா பேரிடர் காலத்தினால் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தற்காலிகமாக மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. புதிதாக எடுக்கப்பட உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு முறை என்பது முழுவதும் டிஜிட்டல் வடிவில் எடுக்க உள்ளதாகவும் ,இதனை கண்காணிப்பதற்கும் ஆராய்வதற்கும் தனி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுமா? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள மத்திய இணை அமைச்சர் "பீகார், மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு கோரிக்கையை விடுத்துள்ளது. இருப்பினும் சுதந்திர இந்தியாவில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவை தவிர மற்ற எந்த ஒரு சாதிவாரி கணக்கெடுப்பையும் மேற்கொள்ளப்படவில்லை" என்றும் எழுத்து பூர்வ பதில் இணை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.