திமுக அரசு பொறுப்பேற்றது முதல் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞரின் பெயரில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 


கலைஞர் கருணாநிதி கலை அறிவியல் கல்லூரி:


உயர்கல்வித்துறை குறித்த விவாதத்தின்போது பேசிய  கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணன், திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரிக்கு கலைஞர் அரசு கலைக் கல்லூரி எனப் பெயர் இருந்ததாகவும், அது தற்போது பின்பற்றப்படாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டார். இதையடுத்து திருவண்ணாமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மீண்டும் கலைஞர் கருணாநிதி கலை அறிவியல் கல்லூரி எனப் பெயர் மாற்றம் செய்யப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.


சட்டப்பேரவையில் கருணாநிதி படம் திறப்பு:


தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவையொட்டி சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர்  கருணாநிதியின் உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.


கருணாநிதி நினைவிடம் மேம்படுத்தப்படும்:


சென்னையில் உள்ள கருணாநிதியின் நினைவிடம் ரூ.39 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அண்ணா நினைவிடத்துக்கு அருகில் 2.21 ஏக்கர் பரப்பளவில் கருணாநிதியின் நினைவிடம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.




மீண்டும் கருணாநிதியின் வருமுன் காப்போம் திட்டம்:


கடந்த 1996-2001-ம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் அன்றைய முதல்வர் மு.கருணாநிதி வருமுன் காப்போம் என்ற திட்டத்தைக் கொண்டுவந்தார். 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இத்திட்டம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் சட்டப்பேரவையில் மருத்துவத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, ஆண்டுக்கு 1000 சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் ‘கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்' மீண்டும் புதுப்பொலிவுடன் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.


கருணாநிதி நினைவு நூலகம்:


 முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 98-வது பிறந்த நாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 5 முக்கிய அறிவிப்புகளில் ஒன்றாக மதுரையில் 70 கோடி ரூபாய் மதிப்பில் 2 லட்சம் சதுர அடியில் கருணாநிதி நினைவு நூலகம் அமைக்கப்படும் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 


அண்ணா சாலையில் மீண்டும் கருணாநிதி சிலை: 


தந்தை பெரியார் 1968ஆம் ஆண்டு நிகழ்ச்சியொன்றில் பேசும்போது, “தம்பிக்குச் சிலை ஒன்றை அமைக்க வேண்டும்" என்றார்.  கருணாநிதிக்கு திராவிடர் கழகத்தால் அமைக்கப்பட்ட அந்த சிலை 1987ல் எம்.ஜி.ஆர் இறந்தபோது அவரது ஆதரவாளர்களால் சேதப்படுத்தப்பட்டது. தொடர்ந்து,  கருணாநிதிக்கு மீண்டும் சிலை வைக்க திராவிடர் கழகம் முயற்சித்தபோது அவர் விடாப்பிடியாக மறுத்துவிட்டார். அவரது ஆட்சிக்காலத்தில், அவருடைய சிலை இருந்த அந்த பீடத்தையும் நீக்கச் சொல்லி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், அண்ணா சாலையில் மீண்டும் கருணாநிதி சிலையை அமைக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் அண்ணா சாலையில் மீண்டும் கருணாநிதிக்கு சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.


கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது:


 கலைஞர் தன்னுடைய சொந்த நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாயை வழங்கி செம்மொழித் தமிழ் அறக்கட்டளையை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நிறுவியுள்ளார். இந்த அறக்கட்டளை மூலம் ஆண்டுதோறும் தகுதி வாய்ந்த தமிழறிஞருக்கு 10 லட்ச ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.


 ஆனால் கடந்த 2010-ம் ஆண்டு முதல்  இந்த விருது அதிமுக ஆட்சியில் வழங்கப்படவில்லை.  வழங்கப்படாமல் இருந்த `கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது'  10 லட்சம் ரொக்கத் தொகையுடன் இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3ம் தேதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


கருணாநிதி சித்த மருத்துவப் பல்கலைக்கழகம்: 


சென்னைக்கு அருகே சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவித்தார். இந்த பல்கலைக்கழகத்திற்குக் கருணாநிதியின் பெயர் வைக்க திமுக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. 


 அதே போல, கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திற்குக் கருணாநிதியின் பெயர் சூட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இவ்வாறு பல்வேறு திட்டங்களை தனது தந்தையும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நினைவுகூறும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.