ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று, இன்று வாக்கு எண்ணிக்கையானது நடைபெற்றது. இந்நிலையில், பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதனால், மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பையும் பாஜக பெற்றுள்ளது.
இந்நிலையில், பாஜக விலிருந்து நீக்கப்பட்டு, சுயேட்சையாக போட்டியிட்ட சாவித்ரி ஜிண்டால், வெற்றி பெற்றிருப்பது பேசு பொருளாகி உள்ளது.
யார் இந்த சாவித்ரி ஜிண்டால்:
சாவித்ரி ஜிண்டால், பாஜகவின் குருஷேத்ரா தொகுதி எம்.பி.,நவீன் ஜிண்டாலின் தாயார் மற்றும் மறைந்த தொழிலதிபர் ஓபி ஜிண்டாலின் மனைவி ஆவார்.அவர் ஹரியானா அமைச்சரும், ஹிசார் தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏவுமான கமல் குப்தாவை எதிர்த்து தேர்தலில் களமிறங்கினார். ஹிசார் தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்காததால் ஜிண்டால் சுயேச்சையாக போட்டியிட்டார். இவரது குடும்ப சொத்து மதிப்புரூ.3.65 லட்சம் கோடி என கூறப்படுகிறது.
சுயேட்சையாக வெற்றி:
இந்நிலையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து அவரிடம் கேட்டபோது, ”நான் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறேன். ஹிசார் குடும்பத்தினருக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன், கட்சியிலிருந்து நீக்கியது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. பாஜகவைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. என்னிடம் எதுவும் கேட்கப்படவில்லை. எனக்கு ஏதாவது தெரிந்தால் சொல்கிறேன்” என செய்தியாளர்களின் கேள்விக்கு சாவித்ரி ஜிண்டால் பதிலளித்திருந்தார்.
இந்நிலையில், சுயேட்சையாக போட்டியிட்ட நாட்டின் பணக்கார பெண்மணியான சாவித்ரி, சுமார் 18, 000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது பேசு பொருளாகியுள்ளது.