ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் - பா.ஜ.க. இடையே நேரடி பலப்பரீட்சையாக இந்த மாநில தேர்தல் அமைந்தது. 90 தொகுதிகளை கொண்ட இந்த மாநிலத்தில் பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது ஜூலானா தொகுதி. 



வெற்றி பெற்றார் வினேஷ் போகத்:


இந்த தொகுதியில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் போட்டியிட்டதே அதற்கு காரணம். இந்த தொகுதியில் முன்னிலை, பின்னடைவு என மாறி, மாறி வந்த வினேஷ் போகத் இறுதிச்சுற்று வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு  5 ஆயிரத்து 909 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வேட்பாளர் யோகேஷ்குமாரை வீழ்த்தி வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற வினேஷ் போகத்திற்கு பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 


பிரஜ்பூஷனுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டில் மத்திய பா.ஜ.க. அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி மல்யுத்த வீரர்களும், வீராங்கனைகளும் நடத்திய போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

ஒலிம்பிக்கில் நடந்த சோகம்:


இந்த போராட்டத்திற்கு பிறகு மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிசில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் பங்கேற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டி நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு 100 கிராம் எடை அதிகமாக இருப்பதாக கூறி அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இது இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், ஒலிம்பிக் கமிட்டி மீது அதிருப்தியையும் ஏற்படுத்தியது.


நாடு திரும்பிய வினேஷ் போகத்திற்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெற்ற அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மேலும் அவருக்கு காங்கிரஸ் கட்சி ஜிந்த் மாவட்டத்தில் உள்ள ஜூலானா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்தது. அந்த தொகுதியில் 2005ம் ஆண்டுக்கு பிறகு காங்கிரஸ் வெற்றி பெற்றதே கிடையாது.

குவியும் வாழ்த்து:


இந்த நிலையில், அந்த தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வினேஷ் போகத்திற்கு நல்ல வரவேற்பும் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் காலை முதலே தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் யோகேஷ்குமாருக்கு எதிராக முன்னிலையில் வினேஷ் போகத் இருந்தார்.


சில சுற்றுகளில் வினேஷ் போகத் பின்னடைவைச் சந்தித்தாலும் கடைசி சுற்று முடிவின்படி வினேஷ் போகத் ஜூலானா தொகுதியில் வெற்றி பெற்று அசத்தினார். ஹரியானாவில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தாலும் வினேஷ் போகத் தொகுதியில் தோல்வியைச் சந்தித்தது பா.ஜ.க.விற்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.


பா.ஜ.க. வேட்பாளர் மட்டுமின்றி ஜூலானா தொகுதியின் எம்.எல்.ஏ.வாக உள்ள அமர்ஜித் தண்டா, ஆம் ஆத்மி வேட்பாளர் கவிதா தலாலையும் வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்த தொகுதியை கடந்த 15 ஆண்டுகளாக தேசிய லோக் தளம் கட்சி தன்வசம் வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 


வெற்றி பெற்ற வினேஷ் போகத்திற்கு காங்கிரஸ் தொண்டர்களும், நிர்வாகிகளும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். மேலும், மல்யுத்த ரசிகர்களும் வினேஷ் போகத்திற்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.