அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து வி.கே.சசிகலா நீக்கப்பட்டது செல்லும் என சென்னை உரிமையில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், சசிகலா மக்கள் மன்றத்திற்கு செல்ல வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொது செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர் 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 29ஆம் தேதி கட்சியின் பொது செயலாளராக வி.கே.சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.
இதனையடுத்து சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலாவை பொது செயலாளர் பதவிகளில் இருந்து நீக்கம் செய்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர்.
இதனையடுத்து பொதுக்குழுவின் முடிவு செல்லாது என அறிவிக்கக் கோரியும், அதில் தங்களை நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரியும் சசிகலா தரப்பில் சென்னை மாவட்ட 4வது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியது சட்டவிரோதம் எனவும் அறிவிக்க வேண்டுமென சசிகலா கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக சசிகலா வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
சசிகலாவை கட்சியிலிருந்தே நீக்கம் செய்யப்பட்டதை உச்சநீதிமன்றமும், டெல்லி உயர்நீதிமன்றம், இந்திய தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொண்டதாலும் சசிகலா தவறான தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக பன்னீர்செல்வம், பழனிச்சாமி ஆகியோர் தங்கள் தரப்பு மனுவில் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் உள்ளிட்ட நிர்வாகிகளின் மனுகளை ஏற்பதாகவும் சசிகலா மனுவை தள்ளுபடி செய்வதாகவும் சென்னை மாவட்ட 4வது கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஜெ. ஸ்ரீதேவி தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த தீர்ப்பானது சசிகலாவுக்கு அரசியல் ரீதியான பின்னடைவை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோல, அதிமுக வழக்கம்போல செயல்படும் என்றும், கட்சியில் மீண்டும் சசிகலா என்கிற பேச்சுக்கே இடமில்லை என்றும் முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் செய்தி தொடர்பு செயலாளருமான வைகைச் செல்வன் பேட்டியளித்துள்ளார்.
இவரைத் தொடர்ந்து பேசிய வழக்கறிஞரும், மூத்த பத்திரிகையாளருமான ஷியாம், “இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதில் பலனில்லை. சசிகலா மக்கள் மன்றத்திற்கு செல்ல வேண்டும்.” என்று கூறியுள்ளார்.
அதேபோல “டிடிவி தினகரனின் கரத்தை சசிகலா பலப்படுத்த வேண்டும். இதன் மூலம் வெற்றி உடனடியாக கிடைத்துவிடாது. ஆனால் நிச்சயம் கிடைக்கும்” என்றும் கூறியுள்ளார்.
கடந்த காலங்களில் சசிகலா அதிமுக பொதுச் செயலாளர் என குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டு வந்த நிலையில், தற்போது சென்னை உரிமையில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.