தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா. ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, தமிழக அரசியலில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களுக்கு இவரே காரணமாக திகழ்ந்தார்.


இந்த சூழலில், சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை நிறைவு பெற்று கடந்த பிப்ரவரி மாதம் சசிகலா, கர்நாடக மாநில சிறையில் இருந்து விடுதலை ஆனார். அவருக்கு அவரது ஆதரவாளர்களும், அ.ம.மு.க. தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால், அவர் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால், திடீரென அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன் என்று அறிக்கை வெளியிட்டார். இதனால், அவரது ஆதரவாளர்களும், தொண்டர்களும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், சட்டசபை தேர்தல் குறித்தும், தன்னுடைய அரசியல் நிலைப்பாடு குறித்தும் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்காமல் அமைதியாகவே இருந்தார்.




சட்டசபை தேர்தலில் பா.ஜ.க., பா.ம.க. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்த அ.தி.மு.க. கூட்டணி 70க்கும் மேற்பட்ட இடங்களை மட்டுமே கைப்பற்றி எதிர்க்கட்சியானது. ஆனால், தேர்தல் முடிவுகளுக்கு பிறகும் சசிகலா அ.தி.மு.க.வின் தோல்வி குறித்து எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை.


இந்த நிலையில், சசிகலாவின் தீவிர ஆதரவாளர் ஒருவர் இன்று அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, அந்த தொண்டரிடம் பேசிய சசிகலா,


'’நல்லா இருக்கீங்களா..? வீட்டில் எல்லாம் நன்றாக உள்ளனரா? சீக்கிரம் வந்துவிடுவேன். ஒன்றும் கவலைப்பட வேண்டாம். கண்டிப்பாக கட்சியை சரி செய்துவிடலாம். அனைவரும் தைரியமாக இருக்க வேண்டும். நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். நிச்சயம் வருவேன்” என்று பேசினார்,




சட்டசபை தேர்தல் முடிந்து இத்தனை நாட்களாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாத சசிகலா, தான் மீண்டும் வருவேன் என்று இந்த தொலைபேசி உரையாடலில் கூறியிருப்பது அவரது தொண்டர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா பேசிய தொலைபேசி ஆடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


மேலும் படிக்க : https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-corona-virus-latest-news-live-updates-corona-lockdown-latest-annoucements-may-29-4406/amp


சட்டசபை தேர்தலில் வட தமிழகத்திலும், கொங்கு மண்டலத்திலும் பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்றியதால் அ.தி.மு.க.வின் சட்டமன்ற தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும் கட்சியில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் இடையே உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. மேலும், தினகரனை கட்சியில் இருந்து ஓரங்கட்டியது முதல் சசிகலா ஆதரவாளர்கள் மற்றும் தினகரன் ஆதரவாளர்களை தொடர்ந்து கட்சித் தலைமை கட்சியில் இருந்து நீக்கி வருகிறது. மேலும், நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலிலும் சசிகலா மற்றும் தினகரனின் ஆதரவாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.


இந்த சூழலில், சசிகலா தான் மீண்டும் வருவேன் என்று பேசிய ஆடியோ இப்போது வெளியாகி இருப்பது சசிகலாவின் ஆதரவாளர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.