TN Corona Virus Update: கேரளாவில் ஊரடங்கு 9-ஆம் தேதி வரை நீட்டிப்பு

Covid-19 Live: தமிழகம் மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 30 May 2021 07:30 AM
கேரளாவில் ஊரடங்கு 9-ந் தேதி வரை நீட்டிப்பு

கேரளாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 16.59 சதவீதமாக பதிவாகி உள்ளது. இருப்பினும், கொரோன பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு, அந்த மாநிலத்தில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கை வரும் 9-ந் தேதி வரை நீட்டித்துள்ளதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இந்த ஊரடங்கில் அத்தியாவசிய சேவைகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.  

தமிழகத்தில் 30 ஆயிரமாக குறைந்தது கொரோனா தினசரி பாதிப்பு

தமிழகத்தில் இன்று 30 ஆயிரத்து 16 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 20 லட்சத்து 39 ஆயிரத்து 716 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 38 ஆயிரத்து 680 ஆகும்.  தமிழ்நாட்டில் இன்றும் கொரோனா தொற்று காரணமாக 486 நபர்கள் உயிரிழந்தனர்.


 


 


 

ஆந்திராவில் கொரோனாவே இல்லாத 1000க்கும் மேற்பட்ட கிராமங்கள்

நாடு முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. ஆனால், பல்வேறு மாநிலங்களிலும் உள்ள மலைக்கிராமங்களில் இதுவரை கொரோனா வைரசின் தாக்கம் துளியளவும் கூட பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இந்த வரிசையில், ஆந்திர மாநிலத்தில் உள்ள கட்டாக் மாவட்டம். இந்த மாவட்டத்தில் சுமார் 1028 கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் ஒரு கிராமத்தில் கூட, இதுவரை கொரோனா வைரசின் பாதிப்பு பதிவாகவில்லை. இதனால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்த கிராமங்களை பச்சை மண்டலங்களாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸ் குறித்து கிராமத் தலைவர்கள், உறுப்பினர்கள், சுகாதாரத்துறையினர் தீவிர விழிப்புணர்வை கிராம மக்களிடம் ஏற்படுத்தி வருகின்றனர்.  

84.5 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்தில் செலுத்தப்பட்டுள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வுப்பணிகளை நடத்தி வருகிறார். இந்த நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பு பணிகள் ஆய்வுக்கூட்டத்தில் அவர் பங்கேற்றார். பின்னர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது,


“ திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் கொரோனா சிகிச்சை மையங்கள், தடுப்பூசி முகாம்கள், கொரோனா பரிசோதனை மையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திருப்பூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள 110 ஆக்சிஜன் படுக்கைகள் வசதி கொண்ட மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.


மேலும், சென்னையில் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் கார் ஆம்புலன்ஸ் சேவையையும் திருப்பூரில் தொடங்கி வைக்கிறார். இந்த ஆம்புலன்ஸ் மூலமாக நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும், ஆய்வகங்களுக்கு அழைத்துச் செல்லவும் பயன்படுத்தப்படும்.


திருப்பூரில் ஆயிரம் படுக்கைகள் அளவுக்கு காலியாக உள்ளதாகல் பதற்றம் இல்லாத சூழல் உருவாகியுள்ளது. திருப்பூரில் 2.12 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்திடம் உள்ள 16 ஆயிரம் தடுப்பூசிகளும் ஞாயிற்றுக்கிழமைகளில் செலுத்தப்படும்.


தமிழகத்திற்கு வந்துள்ள 95.5. லட்சம் தடுப்பூசிகளில் தற்போது வரையில் 84.5 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 6 லட்சம் தடுப்பூசிகளும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 2 லட்சம் தடுப்பூசிகளும் செலுத்துவதற்காக கையிருப்பில் உள்ளது. இந்த தடுப்பூசிகள் அனைத்தும் வரும் 2 அல்லது 3 நாட்களில் மக்களுக்கு செலுத்தப்படும்.


இதுதவிர, தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்கும் வகையில் 3.5 கோடி தடுப்பூசிகள் வாங்க உலகளவிலான ஒப்பந்தம் மூலமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில், ஒப்பந்தப் படிவங்களை ஜூன் 4-ந் தேதிக்குள் சமர்ப்பிக்கவும், ஜூன் 5-ந் தேதி எந்த நிறுவனம் என்பது முடிவு செய்யப்பட்டு 6 மாதத்திற்குள் 3.5 கோடி தடுப்பூசிகளை அவர்கள் வழங்க வேண்டும் என்று விதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


மாநில அரசு ரூபாய் 85 கோடி செலுத்தி 23.5 லட்சம தடுப்பூசியை பெறும் பணியும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதுதவிர, கூடுதலாக மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசியை பெறுவதற்காக முதல்வரின் உத்தரவின்பேரில் டி.ஆர்.பாலு எம்.பி.  ஒரு வாரத்திற்கும் மேலாக டெல்லியிலே தங்கி உள்ளார். தமிழகத்தில் நாள்தோறும் ஆக்சிஜன் கையிருப்பு போதிய அளவிலே உள்ளது. முதல்வர் எடுத்த தீவிர நடவடிக்கை காரணமாக ஆக்சிஜன் கையிருப்பு தற்போது 650 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது.


திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் விதிகளை மீறிச் செயல்படும் நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


இவ்வாறு அவர் கூறினார்.


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 

புதுவையில் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா தினசரி பாதிப்பு

 தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை தாக்கத்தைப் போல, புதுச்சேரியிலும் கொரோனா பாதிப்பு இரண்டாவது அலை தாக்கம் தீவிரமாக காணப்பட்டு வருகிறது. அந்த மாநிலத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து அந்த மாநில சுகாதாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது,


“ புதுச்சேரி மாநிலத்தில் புதியதாக 9 ஆயிரத்து 118 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், புதுச்சேரியில் 788 நபர்களுக்கும், காரைக்காலில் 138 நபர்களுக்கும், ஏனாமில் 34 நபர்களுக்கும், மாஹேவில் 36 நபர்களுக்கும் என மொத்தம் 996 நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.


மேலும், புதுச்சேரியில் 16 பேர், காரைக்காலில் 3 பேர், ஏனாமில் ஒருவர், மாஹேவில் ஒருவர் என 21 பேர் புதுச்சேரியில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 12 பேர் ஆண்கள் ஆவர். 9 பேர் பெண்கள் ஆவர். இன்று 21 பேர் உயிரிழந்ததன் மூலம் அந்த மாநிலத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு காரணமாக 1,497 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை உயிரிழந்துள்ளனர்.


புதுச்சேரியில் கொரோனா இறப்பு விகிதம் 1.45 சதவீதமாக உள்ளது. புதுச்சேரியில் இதுவரை 1 லட்சத்து 2 ஆயிரத்து 896 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் இன்று வரை மருத்துவமனைகளில் மட்டும் 1,694 நபர்களும், வீடுகளிலே தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 11 ஆயிரத்து 459 பேரும் என மொத்தமாக 13 ஆயிரத்து 153 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


புதியதாக 1,718 நபர்கள் கொரோனா சிகிச்சை முடிந்து குணம் அடைந்து இன்று வீடு திரும்பினர். இதனால், மாநிலத்தில் குணம் அடைந்தோர் எண்ணிக்கை 88 ஆயிரத்து 246 ஆக உயர்ந்துள்ளது. இதனால், புதுச்சேரியில் கொரோனாவால் குணம் அடைவோர் விகிதம் 85.76 சதவீமாக உள்ளது.


புதுச்சேரி மாநிலம் முழுவதும் 10 லட்சத்து 34 ஆயிரத்து 12 கொரோனா பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்றறில் 8 லட்சத்து 96 ஆயிரத்து 432 பரிசோதனைகளின் முடிவுகள் நெகடிவ் என்று வந்துள்ளது.


அந்த மாநிலத்தில் மட்டும் சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 2 லட்சத்து 57 ஆயிரத்து 428 நபர்களுக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.”


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கின் காரணமாகவே புதுச்சேரியில் கடந்த வாரம் ஆயிரத்திற்கும் அதிகமான அளவில் பதிவாகி வந்த கொரோனா பாதிப்பு, தற்போது ஆயிரத்திற்கும் குறைவாக பதிவாகி உள்ளது. மேலும், உயிரிழப்பு பாதிப்பும் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது.  

கொரோனாவால் உயிரிழந்த நீதிபதி வனிதா குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் இழப்பீடு - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினசரி 31 ஆயிரம் என்ற அளவில் பதிவாகி வருகிறது. கடந்த 10-ந் தேதி முதல் அமலில் உள்ள ஊரடங்கு காரணமாக கொரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும், தினசரி உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 486 நபர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா இரண்டாம் அலையில் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் உயிரிழந்து வருகின்றனர்.


திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணிபுரிந்து வந்தவர், வனிதா.(55). இவர், தற்போது தஞ்சை மாவட்ட லோக் அதாலத் நீதிமன்ற நிரந்தரத் தலைவராக உள்ளார். இந்த நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நீதிபதி வனிதா தனது சொந்த ஊரான தூத்துக்குடி சென்றார்.


அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது தந்தையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவர் உயிரிழந்தார். இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நீதிபதி வனிதாவும் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். கொரோனாவால் நீதிபதி வனிதாவும், அவரது தந்தையும் தொடர்ந்து உயிரிழந்த சம்பவம் அவர்களது சொந்த ஊரில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


நீதிபதி வனிதா மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது,


“ கொரோனா தொற்று காரணமாக தஞ்சாவூரில் மாவட்ட நீதிபதி நிலையில், மக்கள் நீதிமன்றத்தில் பணியாற்றிய நீதிபதி வனிதா, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும்,, நீதித்துறை அலுவலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்.


அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து, சிறப்பு நேர்வாக கருதி 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்.”


இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


மேலும், முன்னாள் அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் ஆனந்த்கிருஷ்ணன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்தார். அவரது மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், அறிவுக்கூர்மை மிகுந்த  கல்வித்தொண்டாற்றிய ஆனந்த்கிருஷ்ணன் மாணவ சமுதாயத்தின் கலங்கரை விளக்கம். அவர் தி.மு.க. ஆட்சியில் நுழைவுத்தேர்வை ரத்து செய்வதற்கு காரணமாக இருந்தவர். அவர் கொடுத்த அறிக்கைதான் கிராமப்புற மாணவர்களின் உயர்கல்விக் கண்களைத் திறந்தது என்பதை இன்று பொறியாளர்களாக இருக்கும்-மருத்தவர்களாக இருக்கும் ஒவ்வொரு கிராமப்புற நடுத்தர, ஏழை மாணவர்களும் நன்றாக உணர்வார்கள். அரத்தம் மிகுந்த, அறிவுசார்ந்த கல்விக் கட்டமைப்பை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் என்ற தணியாத ஆர்வத்துடன் தனது இறுதி மூச்சுவரை பயணித்த கல்வியாளரை இழந்திருப்பது, கல்வியுலகத்திற்கு மாபெரும் இழப்பாகும் என்று தெரிவித்துள்ளார்.


 


 


 


 


 


 


 


 

கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,


“ தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளின் நலன்களைப் பாதுகாத்திட, அரசு சார்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


தமிழகத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகளுக்கு கண்டறிந்து, ஆதரவற்ற குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையில் முதல்வர் கீழ்க்காணும் நிவாரண உதவிகளை வழங்கிட அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.


கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றித் தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில் தலா ரூபாய் 5 லட்சம் வைப்பீடு செய்யவும், அந்த குழந்தை 18 வயது நிறைவடையும்போது, அந்த தொகையை அந்த குழந்தைக்கு வட்டியோடு வழங்கிட வேண்டும்.


பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கப்படும். இந்த குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரையிலான கல்விக்கட்டணம் மற்றும் விடுதிக்கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் அரசே ஏற்றிடவும், முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.


கொரோனா தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரணத் தொகையாக மூன்று லட்சம் ரூபாய் வழங்கப்படும்.


அரசு காப்பகம் அல்லது விடுதிகளில் இல்லாது, உறவினர், பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்புச் செலவாக, மாதந்தோறும் தலா 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, அவர்கள் 18 வயது நிறைவடையும் வரையில் வழங்கப்படும்.


ஏற்கனவே தாய் அல்லத தந்தையை இழந்து, தற்போது கொரோனாவால் மற்றொரு பெற்றோரையும் இழந்த குழந்தைகளுக்கு ரூபாய் 5 லட்சம் அவர்களது பெயரில் வைப்பீடு செய்யப்படும்.


மாவட்டந்தோறும் ஒரு சிறப்புக்குழு அமைக்கப்பட்டு ஒவ்வொரு குழந்தைக்கும் வழங்கப்படும் உதவித்தொகை, அவர்களது கல்வி மற்றம் வளர்ச்சி ஆகியவை கண்காணிக்கப்படும். அனைத்து அரசு நலத்திட்டங்களும் முன்னுரிமை அடிப்படையில் இக்குழந்தைகளுக்கும், நோய்த் தொற்றினால் கணவன் அல்லது மனைவியை இழந்து, குழந்தையுடன் இருக்கும் பெற்றோருக்கும் வழங்கப்படும்.


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


 


 


 


 


 


 


 


 


 


 

ஹிமாசலப் பிரதேசத்தில் ஜூன் 7-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
கோவிட்–19 பரவலைக் கட்டுப்படுத்த ஹிமாசலப் பிரதேசத்தில் ஜூன் 7-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கோவிட் தடுப்பூசி விநியோகம் மற்றும் பயனடைந்தவர்கள் விவரம்:

தமிழகத்தில் தடுப்பூசி வீணாகும் விகிதம் 12 சதவிகிதமாக உள்ளது.  14 லட்சத்துக்கும் அதிகமாக பெறப்பட்ட கோவாக்ஸின் தடுப்பூசி டோஸ்களில் 11, 72  ,674 டோஸ்கள் மட்டுமே பொதுமக்களுக்கு போடப்பட்டுள்ளன.          


 


11.8 கோடி மாணவர்களுக்கு நேரடி பணப்பரிவர்த்தனை மூலம் நிதியுதவி - மத்திய அரசு ஒப்புதல்

மதிய உணவுத் திட்டத்தின் கீழ் 11.8 கோடி மாணவர்களுக்கு நேரடி பணப்பரிவர்த்தனை மூலம் நிதியுதவி அளிப்பதற்கு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஒப்புதல் அளித்துள்ளார். தகுதியுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இந்த சிறப்பு நலநிதி வழங்கப்படவுள்ளது. 


இதற்காக மத்திய அரசு சுமார் 1200 கோடி ரூபாய் கூடுதல் நிதியை மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கும். இந்த சிறப்பு, ஒருமுறை நலநிதியின் மூலம்,  அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 11.8 கோடி குழந்தைகள் பயனடைவர்கள்.   

கருப்பு பூஞ்சை தொற்றை மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும் - ஒ. பன்னீர்செல்வம் கோரிக்கை

கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்தினை போதுமான அளவில் இருப்பு வைத்துக் கொள்ளவும், இந்நோயினை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கவும், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர்செல்வம் முதல்வருக்கு கோரிக்கை வைத்தார்.

அவசரகாலப் பயணம் - யாரும் நேரில் சந்திக்க ஆர்வம் காட்ட வேண்டாம் : மு.க ஸ்டாலின்

கோவை மற்றும் அதனைச்சுற்றியுள்ள மாவட்டங்களில் எண்ணிக்கை அதிகரிப்பதை கவனத்தில் கொண்டு நேரடிப் பயணம் மேற்கொள்கிறேன். அவசரகாலப் பயணம் என்பதால், கட்சி நிர்வாகிகள் யாரும் நேரில் வரவேற்பதற்கும் சந்திப்பதற்கும் ஆர்வம் காட்ட வேண்டாம்  என மு.க ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.    

55 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் மாநிலங்கள் கையிருப்பில் உள்ளன

கோவக்சின் தடுப்பூசிகள் 55 லட்சத்து 76 ஆயிரம் டோஸ்கள் தற்போது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கையிருப்பில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. 

டிவிஎஸ் நிறுவனம் நிவாரண உதவி

தென் மாவட்ட மருத்துவமனைகளின் தேவைக்காக  டிவிஎஸ் நிறுவனத்தின் சார்பில் முதற்கட்ட ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டன.

கோயம்பத்தூர் மாவட்டத்தில் தடுப்பூசி போடப்படும் இடங்கள்

கோயம்பத்தூர் மாவட்டத்தில் இன்று கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படும் இடங்கள் பற்றிய விவரங்கள்.     


 


மார்பக ஸ்கேன் எடுக்கும் நபர்களின் விவரங்களை மாநகராட்சிக்கு தெரியப்படுத்த வேண்டும்

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள CT ஸ்கேன் மையங்களில் மார்பக ஸ்கேன் எடுக்கும் நபர்களின் விவரங்களை மாநகராட்சிக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 



 


 

ஈரோடு மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு
கோவிட் தடுப்பு மற்றும் மருத்துவப் பணிகளை ஆய்வு செய்ய, முதலமைச்சர் மு க ஸ்டாலின், இன்றும், நாளையும்  ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கு பயணம் செல்கிறார்.

Background

கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையாக, தற்போதுள்ள முழு ஊரடங்கு ஜூன் 07ம் தேதி காலை 6-00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் தற்போது நடைமுறையில் இருந்துவரும் நடமாடும் காய்கறி / பழங்கள் விற்பனை தொடர்ந்து நடைபெறும்.


உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன், அந்தந்தப் பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகளால் வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் மளிகைப் பொருட்கள் வழங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கொரோனா நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.