தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக முதியவர்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், அனைத்து தரப்பினரும் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்துள்ளனர். சில இடங்களில் கொரோனா பாதிப்பு காரணமாக தந்தை, தாய் இருவரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள சோக நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளது. இதனால், அந்த குழந்தைகளின் எதிர்காலம் மிகவும் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் அந்த குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, தமிழகத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளின் பட்டப்படிப்பு வரையிலான கல்லூரிக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் ஆகியவற்றை தமிழக அரசே ஏற்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், அந்த குழந்தைகளின் பெயர்களில் ரூபாய் 5 லட்சம் வங்கிகளில் வைப்பீடு செய்யப்படும் என்றும், அந்த குழந்தைகள் 18 வயதை அடைந்தவுடன் அவர்களுக்கு வட்டியுடன் அந்த தொகை வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.
தமிழக முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். முதல்வரின் இந்த அறிவிப்புக்கு அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
“கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பீடு செய்யப்படும்; 18 வயதில் வட்டியுடன் அத்தொகை வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இது அவர்களுக்கு சிறந்த சமூகப்பாதுகாப்பை அளிக்கும்
இரு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய அதே பொருளாதார நெருக்கடி, வருவாய் ஈட்டும் ஒரு பெற்றோரை இழக்கும் குழந்தைகளுக்கும் ஏற்படும். எனவே, வருவாய் ஈட்டும் குடும்பத்தலைவரை இழந்த குழந்தைகளுக்கும் இதே உதவிகளை தமிழக அரசு வழங்க வேண்டும்”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.