ராயப்பேட்டையில் இருக்கும் அமமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்திவருகிறார்.
மூன்று நாள்கள் நடக்கும் கூட்டத்தின் முதல் நாளில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளுடன் டி.டி.வி.தினகரன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எடப்பாடி பழனிசாமி தற்போது மிகவும் பலவீனமாக இருக்கிறார். அவரிடம் தடுமாற்றமும், பயமும் தெரிகிறது. அதிமுகவை மீட்டெடுப்பதே எங்களின் ஒரே நோக்கம். அதற்காகத் தொடங்கப்பட்டதுதான் அமமுக விரைவில் ஜனநாயக ரீதியாகத் தேர்தலைச் சந்தித்து அதிமுகவை மீட்டெடுப்போம். சசிகலா என்னுடைய சித்தி என்பதால் அமமுக கூட்டங்களில் கலந்துகொள்ளுங்கள். அமமுக கொடியைக் கையில் பிடித்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் என்னால் கூறமுடியாது. அவர் அதிமுக பொதுச்செயலாளர். எனவே, சசிகலாவின் பாதை வேறு, என்னுடைய பாதை வேறு. ஆனால், எங்களின் இலக்கு ஒன்றுதான்” என்றார்.
சிறையிலிருந்து வெளிவந்து அரசியலை விட்டு விலகியிருந்த சசிகலா தற்போது அரசியல் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்திருக்கிறார். அவர் தனது ஆதரவாளர்களையும், அதிமுகவில் அதிருப்தியில் இருப்பவர்களை சந்தித்துவருகிறார்.
சூழல் இப்படி இருக்க சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் கலந்தாலோசித்து முடிவெடுப்பார்கள் என்று ஓபிஎஸ் கூறியிருந்தார். இதனால் அதிமுகவில் காட்சிகள் மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் இருந்த சசிகலாவும் தன்னை அதிமுகவின் பொதுச்செயலாளர் என தற்போது ஆணித்தரமாக கூறிவருகிறார்.
ஒருவேளை அதிமுக சசிகலாவின் கைகளுக்கு சென்றுவிட்டால் அங்கு டிடிவி தினகரனின் ரோல் என்னவாக இருக்கும் என்பதையும், சசி அதிமுக பொதுச்செயலாளர் ஆகிவிட்டால் அமமுகவின் நிலைமை என்னவென்றும் தினகரனின் ஆதரவாளர்கள் சிந்திக்க தொடங்கியுள்ளனர்.
அமமுகவை கலைத்துவிட்டு அதிமுகவில் தினகரன் ஐக்கியமாவாரா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. ஆனால் அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசியதை வைத்து பார்க்கையில் அவர் அமமுகவை கலைப்பதற்கு வாய்ப்பு இல்லை என தோன்றுகிறது.
அதுமட்டுமின்றி, “சசிகலாவின் பாதை வேறு என் பாதை வேறு ஆனால் எங்களின் இலக்கு ஒன்றுதான்” என அவர் கூறுவதன் மூலம் என்ன சொல்ல வருகிறார் என்ற குழப்பமும் ஏற்பட்டுள்ளது.
இருவருக்கும் உள்ள ஒரே இலக்கு அதிமுகவை மீட்பதுதான் எனில் இரண்டு பேரும் ஒரே பாதையில் செல்லலாமே எதற்காக வேறு வேறு பாதை என்று கேட்கும் அரசியல் நோக்கர்கள், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாதான் ஆனால் என் பாதை வேறு என கூறும் தினகரன் சசிகலாவை எதிர்த்து அரசியல் செய்ய தயாராகிவிட்டாரா எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்