தமிழ்நாட்டின் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா. அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் பதவிவகித்து வந்த அவர் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பிறகு தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் மாற்றங்களும், அ.தி.மு.க.வில் பல்வேறு உள்கட்சி மாற்றங்களும் ஏற்பட்டது. அதே தருணத்தில், ஜெயலலிதாவின் மகள் மற்றும் மகன் என்று பலரும் பேட்டிகள் அளிக்கத் தொடங்கினர். சில தரப்பினர் ஜெயலலிதாவிற்கு உண்மையில் எந்த வாரிசும் இல்லை என்றும் கூறினர். அவரது சொந்த வாழ்க்கை பற்றியும் பல்வேறு மர்மங்கள் எழுந்தது.
இந்த நிலையில், சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் பெண் ஒருவர் அஞ்சலி செலுத்தினார். பின்னர், அவர் ஜெயலலிதாவின் மகள் நான்தான் என்று பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,
“ நான் மைசூரில் இருந்தேன். பல்லாவரத்தில் 30 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். வரக்கூடாது என்றே இருந்தேன். அம்மாவின் நினைவு அதிகமாகவே இருந்தது. அதனால், அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கிச் செல்லலாம் என்று வந்தேன். ஜெயலலிதாவின் மகள் நான்தான் என்று எனக்கு பல வருடங்களுக்கு முன்பே தெரியும். எனக்கு விருப்பமில்லாத காரணத்தால்தான் நான் வெளியே சொல்லவில்லை. ஜெயலலிதாவை பார்க்கக்கூடாது என்று யாரும் ஏதும் கூறவில்லை. ஆனால், ஜெயலலிதாவின் மகள் என்று வெளியே கூறுவதால் எனக்கு பிரச்சினை இருக்கிறது. பிரச்சினை இருக்கிறது என்பதால்தான் இத்தனை ஆண்டுகளாக வெளியே வரவில்லை.
என்னிடம் அனைத்து ஆதாரங்களும் உள்ளது. ஒரு நல்ல நாள் வரட்டும். அன்று அனைத்தையும் நான் வௌிப்படுத்துகிறேன். தீபா உள்ளிட்டோர் என்னிடம் பேச முயற்சித்துள்ளனர். ஆனால், நான் யாரிடமும் பேசியதில்லை. ஆதாரம் என்னிடம் இருப்பதால்தான் நான் தைரியமாக பேசிக்கொண்டிருக்கிறேன். அதை நான் கூடிய சீக்கிரம் நிரூபிப்பேன். ஆயிரம் பேர் அம்மா, அம்மா என்று வரலாம். நான் என்னை பெற்ற தாயை தேடி வந்துள்ளேன். எனக்கு அம்மாவிற்கு பிறகு இப்போது சின்னம்மா சசிகலா மட்டும்தான் உள்ளார். இனிமேல்தான் நான் அவர்களை பார்த்து பேச உள்ளேன்.
என்னை வளர்த்த அப்பா, அம்மா மைசூரில் இருந்தனர். அவர்கள் சமீபத்தில் இறந்துவிட்டனர். படித்ததெல்லாம் மைசூர் மற்றும் சென்னையில்தான். சசிகலாவை இதுவரை நான் நேரில் சந்தித்தது இல்லை. சசிகலாவை இன்னும் 3 அல்லது 4 நாளில் சந்திக்க திட்டமிட்டுள்ளேன். சந்திப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளனர். அரசியல் பற்றி ஏதும் கேட்க வேண்டாம். கூடிய விரைவில் அரசியல் பற்றியும், என்னைப் பற்றியும் முழு தகவலும் உங்களுக்கு அளிக்கப்படும்.
தாயைவிட எந்த சொத்தும் பெரியது இல்லை. அவர் ஒரு இரும்புப் பெண்மணி என்பது இந்தியாவிற்கே தெரியும். அம்மா இறந்துவிட்டார்கள் என்ற மன உளைச்சலில் நான் இருந்தேன். அவர்கள்தான் எனக்கு பெரியதாக தெரிகிறார்கள். அவர்கள் சம்பாதித்த காசு, பணம்,சொத்து ஏதும் பெரியதாக எனக்குத் தெரியவில்லை.
ஜெயலலிதா அப்போல்லோ மருத்துவமனையில் இருந்தபோது ஒருமுறை நேரில் சென்று சந்தித்தேன். அப்போலா மருத்துவமனையின் பின்வாசல் வழியாக என்னை அழைத்துச் சென்றனர். ஜெயலலிதாவின் உதவியாளர் முத்துசுவாமி என்பவர் அழைத்துச் சென்றார். ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பேசினேன். உடல்நிலை சரியில்லாததால் அவர் என்னிடம் ஒரு சில வார்த்தைகளே பேசினார். கன்னத்தில் முத்தமிட்டார். எனது கைகளை பிடித்து அவரது கண் கலங்கிவிட்டது. நானும் அழுதுவிட்டேன். இதனால், பேபியை அழைத்துச் செல்லுங்கள் என்று அம்மா கூறினார்.
எனது பெயர் பிரேமா. எங்கம்மா என்னை கூப்பிடுவது ஜெயலட்சுமி. போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் ஒரு முறை நேரில் சந்தித்து பேசியுள்ளேன். அப்போலா மருத்துவமனையில் ஒரு முறை பேசியுள்ளேன்.”
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்