தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பு வகித்த ஜெயலலிதா, கடந்த 2016ம் ஆண்டு உயிரிழந்தார். அவரது உயிரிழப்பில் பலத்த சந்தேகங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது.


தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஜெயலலிதா உயிரிழந்த நாள் டிசம்பர் 5 என்று மருத்துவமனை நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கையில் ஜெயலலிதா டிசம்பர் 4-ந் தேதி பிற்பகல் 3.50 மணிக்கே உயிரிழந்ததாக கூறியிருப்பது அ.தி.மு.க. தொண்டர்கள் மட்டுமின்றி, தமிழக மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




ஜெயலலிதா டிசம்பர் 4-ந் தேதியே உயிரிழந்துவிட்டார் என்பதை உறுதி செய்வதற்கு ஆதாரமாக ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஜெயலலிதாவிற்கு டிசம்பர் 4-ந் தேதி திதி அளித்தார் என்று கூறப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு திதியை அவரது அண்ணன் மகன் தீபக் டிசம்பர் 4-ந் தேதி 3.50 மணிக்கு அளித்தார் என்று ஆறுமுகசாமி ஆணைய விசாரணையில் ஆதாரமாக கூறப்பட்டுள்ளது,


இதுதொடர்பாக, ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கையில், ஜெயலலிதா இறந்த நேரம் முக்கியத்துவம் வாய்ந்ததும், நீண்டகால விளைவுகளை ஏற்படுத்துவதும் ஆகும். டிசம்பர் 5-ந் தேதி இரவு 11.30 மணிக்கு இறப்பு நேரம் சொல்லப்பட்டுள்ளது. மருத்துவமனையில் ஜெயலலிதாவை பராமரித்துக் கொண்ட பணியாளர்களின் சாட்சியங்களுக்கும், இதற்கும் பெரிய வேறுபாடு உள்ளது.




டிசம்பர் 4-ந் தேதி பிற்பகல் 3.50 மணிக்கு முன்பே மறைந்த முதலமைச்சருக்கு இதய செயலிழப்பு ஏற்பட்டது என்றும், இதயத்தில் மின்சார செயல்பாடு எதுவும் இல்லை மற்றும் இரத்த ஓட்டம் இல்லை என்பதே அவரின் உடல்நிலையை கண்காணித்து வந்தவர்களின் தெளிவான சாட்சியங்கள் ஆகும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கை பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளதால், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை இனி தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க : Arumugasamy Commission : அறிவிக்கப்பட்டதற்கு ஒருநாள் முன்னதாகவே ஜெயலலிதா இறந்தாரா? ஆறுமுகசாமி ஆணையம் பரபரப்பு தகவல்


மேலும் படிக்க : ADMK : சட்டமன்றத்தில் ஜனநாயக படுகொலை : அ.தி.மு.க. நாளை உண்ணாவிரதப் போராட்டம் - இ.பி.எஸ். அறிவிப்பு