அண்மையில் மதுரையைச் சேர்ந்த தனது ஆதரவாளர் ஒருவருடன் சசிகலா பேசிய  ஆடியோ  உரையாடல் வைரலானது. அதில் தான் எம்.ஜி.ஆர்.க்கு அரசியல் தொடர்பாக ஆலோசனை வழங்கியதாக சசிகலா பேசியிருந்தார் அவர்.  எம்.ஜி.ஆருக்கே அரசியல் அட்வைஸ் செய்தாரா சசிகலா எனப் புருவம் உயர்த்தினார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். 


அவர் பேசியதிலிருந்து, ‘தலைவர் கூடயும் நான் நிறைய பயணிச்சிருக்கேன்.அது வெளிய தெரியாது.அவரும் சில ஆலோசனை கேட்பாரு.. தன்மையா சொல்லியிருக்கேன். அதே தன்மைதான் அம்மா கோபப்பட்டு முடிவுகள் எடுக்கும்போதும் இருந்தது. தொண்டர்களுக்காக நீங்க அரசியல்ல இருக்கனும்னு அருகில் உட்கார்ந்து அமைதியா சொல்லுவேன்’ எனப் பேசியிருந்தார். 


சசிகலா சொன்னது உண்மையா? அது குறித்த விளக்கத்தை அவர் தனது அடுத்த ஆடியோவில் வெளியிட்டுருக்கிறார். சிவகங்கையைச் சேர்ந்த ஆதரவாளர் ஒருவருடன் பேசிய அந்த உரையாடலில்,’அந்த வயதில் நாம எல்லோரும் எதார்த்தமா இருப்போம், யார் சார்பும் இல்லாம எதார்த்தமா பேசுவோம். எதார்த்தமா பேசுற சின்னவங்கக்கிட்ட தலைவர் (எம்.ஜி.ஆர்) எப்போதுமே ஆலோசனை கேட்பார்.அப்படித்தான் என்னிடமும் கேட்பார். அதைதான் நான் சொன்னேன்’ என விளக்கமளித்துள்ளார். 





சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு, தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சசிகலா சட்டசபை தேர்தலின்போது அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். இதையடுத்து, சமீபகாலமாக சசிகலா தனது ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களுடன் தொலைபேசியில் பேசும் ஆடியோக்கள் வைரலாகி வருகிறது. இதற்கு முன்பு சசிகலா  ஈரோட்டைச் சேர்ந்த சிதம்பரம் என்ற தனது ஆதரவாளரிடம் தொலைபேசியில் பேசியிருந்தார்.

அதில்,“கொரோனா தாக்கம் முழுமையாக ஓயட்டும். கட்டாயம் நான் வந்துடுவேன். கட்சியே இப்போ வேற மாதிரி போயிகிட்டு இருக்கு. விரைவில் வந்த இந்த கட்சியை காப்பாற்றுவேன். அம்மா இருக்கும்போது நம்ம கட்சி நாட்டிலேயே 3-வது பெரிய கட்சினு நமக்கு அந்தஸ்து கிடைச்சது. ஆனா இன்னைக்கு நம்ம எம்.பி.க்களை நாமே இழந்திருக்கிறோம். இருந்த எம்.பி.க்களையும் அவங்களோட தவறான முடிவுகளால் வேற கட்சிகளுக்கு தாரை வார்த்திருக்கிறோம். எந்த பிரச்சினையும் ஏற்படாம என்னோட தலைமையில் இருந்திருந்தால் ஆட்சியை நிச்சயம் அமைத்திருக்கலாம்” என்று பேசியுள்ளார். மேலும், சேலம் ஆத்தூரைச் சேர்ந்த தனது ஆதரவாளர் சுந்தரம் என்பவரிடம் சசிகலா பேசும்போது,” சேலத்தில் கட்சியினர் தன்னிச்சையான போக்கில் செயல்படுகிறார்கள். கட்சி தொண்டர்கள் கவலைப்படாமல் இருங்கள். நான் வந்து எல்லாத்தையும் சரி பண்ணிட்றேன்.” இவ்வாறு அவர் பேசியிருந்தார். 


நேற்று பேசிய பேச்சு பல்வேறு தரப்பில் எதிர்ப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தான், இன்று வேறொருவருடன் பேசிய சசிகலா, அதற்கு பதிலளிக்கும் விதமாக உரையாடியிருந்தார். நேற்று அவர் கூறியிருந்த டோனிலிருந்து முற்றிலும் மாறுபட்டு எதார்த்தமான பேச்சு என்பதைப் போல இன்று பேசியிருக்கிறார் சசிகலா.