வேற்றுமையில் ஒற்றுமை உள்ள நாடு, பல்வேறு கலாச்சாரங்கள் உள்ள நாடு, உலகின் தொன்மையான பண்பாடு உள்ள நாடு இவையெல்லாம் இந்தியா குறித்து உங்களிடம் யாரேனும் ஏதேனும் கேட்டால் உங்கள் பதிலாக இருக்கும். இது மட்டும் இல்லாமல் இந்தியா குறித்து உங்களின் மேம்பட்ட அபிப்ராயத்தைக் கூட நீங்கள் தெரிவிக்கலாம். ஆனால் இந்த கட்டுரையை முழுமையாக வாசித்த பின்னர் உண்மையிலேயே இந்தியா நாம் கருதக்கூடிய பண்புகளை பெற்றிருக்கின்றதா என்பதை உங்கள் முடிவுக்கு விட்டுவிடுகின்றேன்.
130 கோடி மக்கள் வாழும் நமது நாட்டில் உணவுப் பழக்கம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக உள்ளது. சிலர் தான் இந்த மதத்தை அல்லது சாதியைச் சார்ந்தவன் என்பதால் நான் இந்த உணவுப் பழக்கத்தைக் கொண்டிருக்கின்றேன் என்கிறனர். சிலரோ நான் இந்த மதம் அல்லது சாதியைச் சார்ந்தவர் என்பதற்காக இவைகளை மட்டும்தான் நான் உணவாக உட்கொள்ள வேண்டும் என்பதை ஏற்க மறுக்கின்றேன். எனவே நான் எனது விருப்ப உணவுகளை சாப்பிடுகின்றேன் என்கின்றனர். இந்த உணவுத் தேர்வு என்பது இறைச்சி உண்பதினை மையப்படுத்திதான் இருக்கின்றது. குறிப்பாக மாட்டிறைச்சி. இன்றைக்கு அசைவ உணவுகளை விரும்பி உண்ணும் குடும்பத்தில் யாரேனும் ஒருவர் முழுக்க முழுக்க சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுபவராக இருப்பதையும், எங்களது வீட்டில் அனைவரும் வெஜிடேரியன் அதனால நான், நான் - வெஜ் சாப்பிடனும்னு நெனச்சா ஹோட்டலில் சாப்பிட்டுக்குவேன் என சொல்பவர்களையும் பார்க்கத்தான் செய்கின்றோம்.
இந்த கட்டுரையை எழுதுவதற்கு முக்கிய காரணம், இணையத்தில் தற்போது மிகவும் பரவலாக பகிரப்பட்டும் வரும் விராட் கோலி, அவரது மனைவி நடிகை அனுஷ்கா சர்மா மற்றும் அவர்களது குழந்தை மாட்டுக் கறி சாப்பிட்டார்களா? இல்லையா? என்பதுதான். இது மட்டும் இல்லாமல் தமிழில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின், போட்டியாளர் கூல் சுரேஷ் சக போட்டியாளரான பூர்ணிமாவிடம், ‘’நீ பீஃப் சாப்புடுவயா? எனக் கேட்டுள்ளார். அதற்கு பூர்ணிமாவோ, சாப்புடுவேன் என பதில் அளித்துள்ளார். இதற்கு கூல் சுரேஷ் நான் சாப்பிடமாட்டேன்” என பதில் அளித்ததாக நேற்றைய அதாவது டிசம்பர் 9ஆம் தேதி எப்பிசோடில் பூர்ணிமா தனது சக போட்டியாளார் மாயாவிடம் கூறினார்.
இந்தியாவின் பொதுப்புத்தியில் மாட்டுக்கறி என்பது இரண்டு வகை மக்கள்தான் உண்பார்கள் என்ற மனநிலை உள்ளது. அதாவது, பட்டியலின மக்களும் இஸ்லாமியர்களும்தான். இதில் இஸ்லாமியர் அல்லாத ஒருவர் மாட்டுக்கறி உண்ணுகின்றார் என்றால் அவர் பட்டியல் சாதியைச் சார்ந்தவராகத்தான் இருப்பார் என்ற மனநிலை கொண்ட பூமர்களும் இருக்கின்றனர். இஸ்லாமியர்களை அடையாளம் காண்பது என்பது அவர்களின் பெயர் உள்ளிட்டவற்றை வைத்து அடையாளம் கண்டுவிடுகின்றனர். ஆனால் பட்டியலின மக்களை அடையாளம் காண்பதற்குத்தான் எக்கச்சக்க கேள்விகளை முன்னெடுக்கின்றனர். அதில், நீங்க எந்த ஊரு? அங்க உங்க வீடு எங்க இருக்கு? காடு தோட்டம் இருக்கா? என்ன வேலை செய்கிறீர்கள்? அல்லது உங்க அப்பா அம்மா என்ன வேலை செய்கின்றனர்? நீங்க என்ன ஆளுங்க? அந்த ஊர்ல இவங்க உங்களுக்கு என்ன உறவு? இப்படியான கேள்விகளைக் கொண்டு தமிழ்நாட்டில் சாதியினை அடையாளம் காண முயற்சித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டிற்கு வெளியில் குறிப்பாக வட இந்தியாவில் Surname - இனைக் கேட்கின்றனர். பன்னாட்டு நிறுவனங்களில் நடக்கும் நேர்முகத்தேர்வில் “What is Your Family? " என்ற கேள்வியும், கல்லூரி மற்றும் அலுவலகங்களில் , “ நீங்க பீஃப் சாப்புடுவீங்களா?” என்ற கேள்வியும் இந்த வரிசையில் இணைந்துள்ளது. இப்படியான கேள்விகள் மூலம் அறிய விரும்புவது ஒன்றுதான். அது தனக்கு எதிரில் உள்ள மனிதனின் சாதி. இதன் மூலம் செய்ய முற்படுவது தீண்டாமை, பாகுபாடு, தீட்டு, இழிவு உள்ளிட்டவை.
விராட் கோலி தனது குடும்பத்துடன் மாட்டிறைச்சி சாப்பிட்டார் என சமூகவலைதளத்தில் வெளியான தகவலினால் பலர் விராட் கோலி எப்படி மாட்டிறைச்சி சாப்பிடலாம் என்றெல்லம் கேள்விகளை எழுப்பிவிட்டனர். சமூக வலைதளங்களில் வெளியான தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது. இப்போது எழும் கேள்வி என்னவென்றால், “ விராட் கோலி என்ன உணவு சாப்பிட்டால் யாருக்கு என்ன பிரச்னை? அது விராட் கோலியோ பூர்ணிமாவோ அல்லது யாரோ அவர்கள் தங்களது தட்டில் என்ன உணவு இருக்க வேண்டும் என்பதை அவர்களே தேர்வு செய்கின்றனர். உணவு தனிமனித விருப்பம் மற்றும் சுதந்திரம் இல்லையா? அதில் தலையிடுவது நாகரீக சமூகத்திற்கோ அல்லது நாகரீக மனிதனுக்கோ அழகா? ஒருவர் மாட்டிறைச்சி உட்பட எதேனும் உணவு, அது சைவமோ அல்லது அசைவமோ சாப்பிடுவது உங்களுக்கு பிரச்னையை ஏற்படுத்துகின்றது என்றால் அவர்கள் தட்டினை தட்டிவிடவேண்டும் என்பதில் கவனத்தினை திருப்பாமல் உங்களது கவனத்தினை வேறு விஷயங்களில் செலுத்துவது நல்லது. குறிப்பாக அது அவர்களின் உணவுச் சுதந்திரம் / தனிமனித சுதந்திரம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். எவ்வளவு முயற்சி செய்தும் உங்களது கவனத்தினை திசை திருப்ப முடியவில்லை என்றால் சமூகப் பார்வை கொண்ட மனநல மருத்துவரை அணுகுவது நல்லது.
இன்றைக்கு உலகப் புகழ்பெற்ற விராட் கோலி மிகவும் பிரபலமான நிகழ்ச்சியின் போட்டியாளர் பூர்ணிமா ஆகியோர் மாட்டிறைச்சி சாப்பிடுவது பேசுபொருளாகின்றது. வட இந்தியாவில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக சந்தேகத்தின்பேரில் பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டு மக்கள் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவங்களும் நடந்துள்ளது. அதிகப்படியான மக்கள் பார்க்கும் விவாத நிகழ்ச்சியில் ஒருவர் "அசைவ உணவு உண்பதால் அவர்களுக்கு மிருகத்தின் குணாதிசயங்கள் வரும்" என அறிவியலுக்குப் புறம்பான பூமர் கருத்துக்களை பேசுவதையும் பார்க்கின்றோம். ஒருவரின் உணவுத் தேர்வு குறித்து தனிமனிதர்களே தவறான புரிதலில் இருக்கும்போது அரசு மற்றும் அரசு ஊழியர்கள் இதைவிட மோசமான மனநிலையில் உள்ளனர். தமிழ்நாட்டில் ஆம்பூரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்த திட்டமிடப்பட்ட பிரியாணி திருவிழாவில் கூட மாட்டுக்கறி பிரியாணிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இது தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்ட பின்னரும் மாவட்ட நிர்வாகம் அமைதியாக இருந்துவிட்டு மழையைக் காரணம் காட்டி பிரியாணி திருவிழாவினை ஒத்திவைத்தது. சென்னை தீவுத்திடலில் நடத்தப்பட்ட உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சி ஸ்டாலுக்கு இறுதியாகத்தான் அனுமதி வழங்கப்பட்டது. இந்த வரிசையில் உத்திரபிரதேச அரசு சமீபத்தில் ஹலால் செய்யப்பட்ட உணவுகளை விற்கத் தடை விதித்தது. ஹாலால் செய்யப்பட்ட உணவை உண்பது என்பது இஸ்லாமியர்களின் மதம் சார்ந்த நம்பிக்கை என்பது தெரிந்தும் மாநில அரசு இவ்வாறு உத்தரவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் தொடங்கி அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தும் மாநில அரசு செவி சாய்க்கவில்லை. ஆனால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக மட்டும் அசைவ உணவுகளை ஹலால் செய்து கொள்ளலாம் எனக் கூறியுள்ளது. இப்படியான உத்தரவுகள் மூலம் உத்திரபிரதேச பாஜக அரசு கட்டமைக்க முயலும் சமூகம் எத்தகையது என்ற கேள்வியை எழுப்பாமலும் இருக்க முடியவில்லை.