2024ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தலில் I.N.D.I.A கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளுக்கு இடையிலான தொகுதிப் பங்கீடு முடிவடைந்துள்ளது. அதில், சாமாஜ்வாதி கட்சி காங்கிரஸ்க்கு உத்தர பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் 17 இடங்களை காங்கிரஸ்க்கு ஒதுக்கியுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று இரவுக்குள் வெளியாகும் என கூறப்படுகின்றது. மேலும் சமாஜ்வாதி கட்சி 62 இடங்களில் போட்டியிடப்போவதாகவும் சமாஜ்வாதி கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் பேரேலி, ஆமோதி, வாரணாசி உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகின்றது. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடவுள்ளதாக கூறப்படும் வாரணாசி தொகுதியை காங்கிரஸ் கட்சி சமாஜ்வாதி கட்சியிடம் கேட்டுப் பெற்றதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் சமாஜ்வாதி கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவ், உத்தரபிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி துடைத்து எறியப்படும். சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக செய்த தில்லு முள்ளு போல் இதுவரை யாரும் செய்தது இல்லை. பாஜகவின் தில்லு முள்ளுகளை உச்சநீதிமன்றமே நிரூபத்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் தனக்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் எந்தவிதாமான கருத்து வேறுபாடு இல்லை. எங்கள் கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்தது. இது அரசியலமைப்பைக் காப்பாற்றவும், நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்றவும், கங்கா-ஜமுனி தெஹ்சீப்பைக் காப்பாற்றவும், சகோதரத்துவத்தைக் காப்பாற்றவும் நடத்தப்படும் தேர்தல்” என தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய் யாத்திரையில் வரும் பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் உத்தர பிரதேசத்தின் மேற்கு மாவட்டங்களில் நடைபெறவுள்ள நியாய் யாத்திரையில் கலந்து கொள்ளவுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.