நான் கோபத்தில் அரசியலுக்கு வந்தவன் இல்லை என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தலைவராக உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி இன்றோடு 7 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனைத் தொடர்ந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் கமல்ஹாசன் கொடியேற்றினார். தொடர்ந்து தொண்டர்களிடையே பேசிய கமல்ஹாசன் அனல் பறக்கும் வகையில் கருத்துகளை தெரிவித்தார்.
அப்போது, “இந்த 7 ஆண்டுகள் எப்படி கடந்தது என தெரியவில்லை என சொல்ல முடியாது. அந்த அளவுக்கு ஒவ்வொரு கணமும் எனக்கு புரிந்தது, தெரிந்தது. நேர்மையும், உத்வேகமும் தான் என்பது எனக்கு தெரிந்தது. நான் கோபத்தில் அரசியலுக்கு வந்தவன் இல்லை. மக்களுக்கு ஏன் இப்படி நடக்கிறது என்ற சோகத்தில் வந்தவன். என்னை எல்லாரும் கேட்கிறார்கள். நீங்கள் படங்களில் நடிக்கிறீர்களே, முழுநேர அரசியல்வாதி என்பது இல்லையா? என எல்லாரும் கேட்பதாக என் கட்சிக்காரர்கள் கூட சொன்னார்கள். முழு நேர அரசியல்வாதி என்பவர் யார்? - அப்படி என்ற ஒருவனும் இல்லை.
அவனவனுக்கு 8 மணி நேரம் தூக்கம், 8 மணி நேரம் வேலை, 4 மணி நேரம் குடும்பத்தில் இருந்தாக வேண்டும். இங்கு நீங்கள் முழுநேர அரசியல்வாதி யார் என்பதை சொல்லுங்கள், நான் ஏன் சினிமாவில் நடிக்கிறேன் என சொல்கிறேன். எனக்கு எல்லா வசதிகள் நீங்கள் கொடுத்தும் நான் ஏன் அரசியலுக்கு வர வேண்டும் என கேட்டால், உங்கள் அன்புக்கு இன்னும் கைம்மாறு செய்யவில்லை என அர்த்தம். ஏன் முழு நேர அரசியலில் வரவில்லை என கேட்பவர்களுக்கு, அரசியலில் நான் செய்வது எல்லாம் நான் சம்பாதித்த பணத்தில் செய்தது.
இந்த திமிரெல்லாம் எனக்கு பெரியாரிடம் இருந்து வந்தது. நான் கோவை தெற்கு தொகுதியில் தோற்றதற்கு காரணம் 90 ஆயிரம் பேர் வாக்கை செலுத்தாததால் தான். இந்தியாவில் 40% மக்கள் ஓட்டு போடாமல் இருக்கிறார்கள். தேர்தலில் ரூ.95 லட்சம் மட்டுமே செலவு செய்கின்றவன் நேர்மையாக தேர்தலில் வெற்றி பெற முடியாது. என்னை அரசியலுக்கு வருவது கஷ்டம் என சொன்னார்கள். போக வைக்கிறது அதை விட கஷ்டம் என சொல்லிக் கொள்கிறேன்.
நான் சும்மா சொல்லவில்லை. எஞ்சிய வாழ்நாளை கொடுப்பது சுலபமல்ல. இனி என்னுடைய எல்லாம் உங்களுடையது தான். அத்தகைய ஆளை நீங்கள் தூக்கி பிடிக்க வேண்டும். நான் உங்களிடம் திருட வரவில்லை. என்னுடைய அரசியல் பயணம் ஆரம்பித்து விட்டது. தொடர்ந்து அழுத்தமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறேன்.நீங்கள் சக அரசியல்வாதிகள் என நினைப்பவர்கள் வியாபாரிகள். அவர்களை பார்த்து ஆசைப்படாதீர்கள். இந்த அரசியல் என்பதே வேறு. ஏற்கனவே மக்களிடம் பெற்றதற்காக வட்டியை நான் செலுத்துகிறேன் என நினைத்தால் தான் இந்த அரசியலுக்கு வர முடியும். இது நாளைய சமுதாயத்துக்கு தேறும். கொள்ளைக்கூட்டத்தில் நாமும் தீப்பந்தம் பிடித்து சொல்வோம் என நினைக்காதீர்கள், இதை மாற்ற வந்தவர்கள் நாம். கட்சி எல்லாம் இரண்டாவது தான், தேசம் தான் முதலில் முக்கியம்” என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.