தமிழ்நாட்டில் மக்கள் பாதுகாப்பை தேடிச் செல்லும் காவல்நிலையங்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.


எடப்பாடி காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு


சேலம் மாவட்டம் எடப்பாடி காவல்நிலையத்தில் அதிகாலையில் அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்ற நிலையில், இந்த கருத்தை எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் . மேலும்,  பெட்ரோல் குண்டு வீசியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என்றும்  "இதை விட மோசமாக சட்டம் ஒழுங்கு சீர்கெட முடியாது" என்றும் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி,  ஒவ்வொரு முறையும் நினைப்பதற்குள் அதனினும் மோசமான ஒரு நிகழ்வு இந்த  திமுக ஆட்சியில் ஏற்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.


 பயமற்ற நிலை நிலவுகிறது - ஈபிஎஸ்


காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசும் அளவிற்கு சட்டத்தின் மீதும், காவல்துறையின் மீதும் குற்றவாளிகளுக்கு துளியும் பயமற்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ளதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெட்கித் தலைகுனியவேண்டும் என்று தெரிவித்துள்ள ஈபிஎஸ்,  மக்கள் பாதுகாப்பு வேண்டி செல்லும் காவல் நிலையங்களுக்கே பாதுகாப்பற்ற நிலையிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். மேலும்,  சீர்கெட்டுள்ள சட்டம் ஒழுங்கைக் காக்க தவறியதால் ,தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்து கொண்டிருக்கிறது என்றும் சட்டம் ஒழுங்கை காத்திடவும் , தொழில் முதலீட்டை தக்க வைக்கவும் , உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன் என தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.


என்ன நடந்தது எடப்பாடியில் ?


அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தன்னுடைய பெயருக்கு முன்னாள் சேர்த்துக்கொள்ளும் அவருடைய சொந்த ஊரான எடப்பாடியில் உள்ள காவல்நிலைத்தில் இன்று அதிகாலை சில சமூக விரோதிகள் பெட்ரோல் குண்டுகளை காவல்நிலையம் நோக்கி வீசி எறிந்துள்ளனர். அதில் ஒரு குண்டு மட்டும் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனை அப்போது பணியில் இருந்த காவலர்கள் தண்ணீரை ஊற்றி அணைத்துள்ளனர்.






பொதுவாக, குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பணமாக விளங்குவது காவல்நிலையம்தான். ஆனால், அந்த எந்த பயமும் இன்றி காவல்நிலையம் மீதே பெட்ரோல் குண்டுகளை வீசும் துணிச்சல பெற்ற சமூக விரோதிகள் இந்த செயலை அரங்கேற்றியுள்ளனர். ஏற்கனவே, தமிழ்நாட்டில் ஆம்ஸ்ட்ராங்க் கொலை, காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் கொலை உள்ளிட்டவைகளை வைத்து சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் சொந்த ஊரான எடப்பாடியிலேயே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில், பெட்ரோல் குண்டுகளை வீசிய நபர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர்.