சேலம் மாநகராட்சி செவ்வாப்பேட்டை 30 வது வார்டு அய்யாசாமி தெரு உள்ளது. இப்பகுதியின் கவுன்சிலர் திமுக கட்சியை சேர்ந்த அம்சா. கடந்த 15 நாட்களுக்கு முன்பு குடிநீர் செல்லும் குழாயில் பழுதாகியுள்ளது. இதுகுறித்து திமுக பெண் கவுன்சிலர் அம்சா சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் குடிநீர் செல்லும் குழாயை விரைந்து சீர்படுத்த உத்தரவிட்டுள்ளார். உடனடியாக சம்பந்த இடத்திற்கு வந்த சேலம் மாநகராட்சி பணியாளர்கள் குடிநீர் குழாயில் உள்ள பழுதினை கண்டறிந்து மூன்று வீடுகளில் உள்ள குழாய்களில் அடைப்பு இருப்பதை கண்டறிந்துள்ளனர். அதன் பின் இரண்டு வீடுகளில் உள்ள குடிநீர் குழாயை சரி செய்த சேலம் மாநகராட்சி பணியாளர்கள் மூன்றாவது வீட்டிற்கு சென்றபோது வீடு பூட்டி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாநகராட்சி பணியாளர்கள் மூன்றாவது வீட்டை சீர் செய்யாமல் சென்றுள்ளார். 



இதனைத் தொடர்ந்து அடுத்த நாள் திமுக பெண் கவுன்சிலர் நேரடியாக அப்பகுதிக்குச் சென்று பணிகள் குறித்து ஆய்வு செய்துள்ளார். அப்போது மூன்றாவது வீடு குடிநீர் குழாயை சரி செய்வதற்கு பிளம்பரை அழைத்து வந்து சரி செய்துள்ளனர். பிளம்பருக்கான கூலியை கவுன்சிலர் கொடுப்பதாகவும், பைப் வாங்கிய செலவை வீட்டின் உரிமையாளர் ஏற்றுக்கொள்ளுமாறு கூறியதாக கூறப்படுகிறது. இதற்கு வீட்டில் உரிமையாளர் மறுப்பு தெரிவித்த நிலையில் திமுக பெண் கவுன்சிலர் மற்றும் வீட்டின் உரிமையாளர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் அப்பகுதியில் பொதுமக்கள் திறந்தனர். அப்போது திமுக பெண் கவுன்சிலர் அவ்வீட்டின் உரிமையாளரை பார்த்து காரி உமிழ்ந்துள்ளார். அதனை அங்கிருந்து ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். தற்போது அந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.






 


இது குறித்து ஏபிபி செய்தி நிறுவனம் திமுக பெண் கவுன்சிலரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, பல நாளாக 30 வது வார்டு ராஜா தியேட்டர் அய்யாசாமி தெருவில் நீண்ட நாட்களாக குடிநீர் செல்லும் குழாயில் அடைப்பு ஏற்பட்டு அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இதனை அறிந்து சம்பந்த இடத்திற்கு சென்று பார்த்த போது மூன்று வீடுகளில் உள்ள குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. உடனடியாக சேலம் மாநகராட்சி பணியாளர்களை அழைத்து சரி செய்ய உத்தரவிட்டேன். அதன் அடிப்படையில் வந்த சேலம் மாநகராட்சி பணியாளர்கள் இரண்டு வீடுகளில் உள்ள குழாய்களை சீரமைத்தனர். மற்றொரு வீட்டில் உரிமையாளர்கள் இல்லாததால் அப்பணி தடைபட்டது.


அதன்பின் அடுத்த நாள் காலை அங்கு சென்ற போது அந்த வீட்டின் உரிமையாளர் தன்னை பற்றி அருவருக்கத்தக்க வார்த்தைகளை கொண்டு மிகவும் தரக்குறைவாக பேசியதாக கூறினார். பொது இடத்தில் என்னைப் பற்றி தரகுறைவாக பேசியதால் மனம் உடைந்து கண்ணீர் வந்தது. அந்தக் கண்ணீர் மூக்கிற்குள் சென்றதால் தும்பல் ஏற்பட்டது. எனவே அந்த வீடியோவில் உள்ள காட்சியில் நான் தூங்கியது, காரி உமிழ்ந்தது போல் காட்சியாகிவிட்டது என விளக்கம் அளித்தார். மேலும் எங்களது கட்சியின் எனக்கு எதிராக பலர் செயல்பட்டு வருகின்றனர். அவர்களின் தூண்டுதலின் அடிப்படைகள் தான் இது போன்ற காரியங்களில் பலர் ஈடுபட்டு வருகின்றனர் என்று திமுகவினர் மீது குற்றம் சாட்டினார்.