சேலம் மாவட்டத்தில் நடந்த அதிமுக உட்கட்சித் தேர்தலில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி செய்யப்பட்ட நிலையில், சில தினங்களில் அப்பதவிக்கு நெருங்கிய நண்பரான இளங்கோவனை ஈபிஎஸ் வழங்கி இருந்தார். இந்த நிலையில் சேலம் மாவட்ட அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் வையாபுரி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கொடநாடு விவகாரத்தில் விசாரணை வளையத்துக்குள் உள்ள இளங்கோவனை மாவட்ட செயலாளராக நியமித்து ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் அதிமுகவை அழித்து வருபவர். நான் கடந்த 2004 ஆம் ஆண்டில் இருந்து சேலம் ஒன்றியச் செயலாளராக பதவி வகித்து வருகிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக சேலம் கிழக்கு ஒன்றிய செயலாளராக பதவியில் இருந்து வருகிறேன். இந்த நிலையில் கடந்த 25 ஆம் தேதி ஓமலூர் அலுவலகத்தில் நடந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் என கூறப்பட்டது. ஆனால் திடீரென இளங்கோவன் சேலம் புறநகர் மாவட்ட செயலராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அறிவிப்பு எங்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தி உள்ளது. சேலம் மாவட்ட அதிமுகவையே அழிவு பாதைக்கு கொண்டு செல்பவர் இளங்கோவன். எடப்பாடி பழனிசாமி அவரிடம் மிகுந்த நெருக்கமாக இருப்பதைப் போல எங்களை போன்ற காட்சிகளிடம் அவர் காட்டிக் கொள்கிறார். 



சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் பதவியில் இளங்கோவன் இருந்தால் அவர்கள் ஒன்று சேர்ந்து செயல்பட முடியாது. ஆனால் கட்சியில் இருந்து விலக மாட்டேன். அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் பொறுப்பில் இருந்து விலக உள்ளேன் என்றார். அதிமுக தலைமை வேறு யாருக்காவது புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பை கொடுத்திருக்கவேண்டும், இவருக்கு கொடுக்கக் காரணம் என்ன என்று கேள்வி எழுப்பினார். புறநகர் மாவட்டச் செயலாளர் பதவி இளங்கோவனுக்கு கொடுக்கப்பட்டது தவறானது. தலைமை செய்தது தவறு. சிந்தித்து பொறுப்பு வழங்கியிருக்க வேண்டும். நான் மட்டுமல்ல மற்ற ஒன்றியத்தில் உள்ள பொறுப்பாளர்களின் எண்ணங்கள் என்னை விட மிகவும் மோசமாக உள்ளது. ஜெயலலிதா குடியிருந்த கொடநாடு எஸ்டேட்டை கோயிலாகக் கருதி வருகிறோம். அந்த இடத்தில் கொலை, கொள்ளை நடந்துள்ளது. அந்த விவகாரத்தில் விசாரணை வளையத்துக்குள் இளங்கோவன் உள்ளார் என கூறப்படுகிறது.  



அதனால் அதிலிருந்து அவர் நிரபராதி என நிரூபிக்கும் வரை, அவருக்கு மாவட்ட செயலாளர் பதவியை தரக்கூடாது. பெரும்பாலான ஒன்றியச் செயலாளர்கள் என்னை போன்ற மன நிலையிலேயே உள்ளனர். இளங்கோவனால் அதிமுக நிர்வாகிகள் பலர் பொருளாதார ரீதியில் நலிவடைந்து நடுத்தெருவுக்கு வந்துவிட்டனர். முதலில் நான் எதிர்ப்பு தெரிவித்து உள்ளேன் இதனால் அனைத்து நிர்வாகிகளும் மகிழ்ச்சி அடைவார்கள். அதிமுக கட்சி வளரவேண்டும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நான் என்னுடைய ஒன்றிய செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன். தொடர்ந்து தொண்டனாகவே இருப்பேன். சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக இளங்கோவன் நியமித்து இருப்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. இதே போல தான் பல நிர்வாகிகளும் கருதுகின்றனர்.