கடந்த 2016 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வருமானத்திற்கு அதிகமாக 58.23 கோடி ரூபாய் சொத்து சேர்த்த விவகாரம் தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 3928 சதவீதம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வேலுமணி அவரது சகோதரர் அன்பரசன் உள்ளிட்ட 13 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் அவருக்கு தொடர்பான 58 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.



ரெய்டு நடக்கும் வீட்டில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி


இதில் கோவை மாநகரில் 27 இடங்களிலும், புறநகரில் 14 இடங்களிலும் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 41 இடங்களில் சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது. கோவை சுகுணாபுரம் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இல்லம், வேலுமணியின் சகோதரர் அன்பரசன் இல்லம், எஸ்.பி வேலுமணியின்  உதவியாளர் சந்தோஷ் இல்லம், கேரளா மாநிலம்  அட்டப்பாடி பகுதியில் உள்ள பண்ணை  இல்லம், கோவை புதூர் பகுதியிலுள்ள ஜெ. ஆர். டி ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர் ராஜேந்திரன் இல்லம், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளர் சந்திரசேகரன் இல்லம், கேசிபி குழும உரிமையாளர் சந்திரபிரகஷ், கிருஷ்ணா கல்வி குழுமங்களின் தலைமை செயல் அதிகாரி மலர்விழி இல்லம் மற்றும் அலுவலகம்,  மதுக்கரையில் உள்ள வேலுமணியின் உறவினர் சண்முகராஜா இல்லம், சிங்காநல்லூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர். ஜெயராமன் இல்லம் , எட்டிமடையில் உள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம் இல்லம், குறிச்சி பகுதியில் உள்ள அதிமுக உறுப்பினர் செந்தில் குமார் இல்லம், குனியமுத்தூரில் உள்ள அதிமுக பிரமுகர்கள் முந்திரிகோபால், ரமேஷ் ஆகியோரது இல்லம், கோவை புதூரில் உள்ள அதிமுக நிர்வாகி சிவக்குமார் இல்லம், முதலிபாளையம் பகுதியில் உள்ள ஒன்றிய செயலாளர் கந்தவேல், மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் துவாராகா நாத் சிங்,பீளமேடு பகுதியில் உள்ள ஏடிஎஸ்பி அனிதா இல்லம், பீளமேடு பாரதி நகர் பகுதியில் உள்ள காவல் ஆய்வாளர் லோகநாதன் இல்லம், அன்னூரில் உள்ள காவல் ஆய்வாளர் சந்திரகாந்தா இல்லம் உட்பட கோவை மாவட்டத்தில் 41 இடங்களில் சோதனையானது நடைபெற்று வருகின்றது.


 



எஸ்.பி.வேலுமணி வீட்டுக்கு வருகை தந்துள்ள அதிமுக எம்.எல்.ஏக்கள்


இதனிடையே சுகுணாபுரம் பகுதியில் உள்ள எஸ். பி. வேலுமணி வீட்டின் முன்பு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் திரண்டனர். திமுக அரசு பொய் வழக்கு போடுவதாக கூறி சிறிது நேரம் கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும் காவல் துறையினரிடம் வாக்காவாதத்திலும் ஈடுபட்டனர். அதிமுக தொண்டர்களுக்கு அவ்வப்போது தேநீர், ரோஸ் மில்க், தண்ணீர் பாட்டில்கள் விநியோகம் செய்யப்பட்டது.


 



குளிர்பானம் பருகும் அதிமுக தொண்டர் 


அதேபோல முறுக்கு, பிஸ்கட் ஆகியவையும் வழங்கப்பட்டன. காலை உணவாக இட்லி, பொங்கல், கேசரி, கிச்சடி,  வடை ஆகியவை வழங்கப்பட்டன. மதியம் சாம்பார் சாதம் வழங்கப்பட்டது. உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் ஆட்டோக்களில் பெட்டி பெட்டியாக கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில் அதிமுக தொண்டர்களுக்கு காலாவதியான தண்ணீர் பாட்டில்கள் விநியோகம் செய்தது தெரியவந்துள்ளது. தண்ணீர் பாட்டில்களில் 2021 ஜீலை மாதம் தயார் செய்யப்பட்டதும், 6 மாதங்களுக்குள் குடிக்க உகந்தது என்பதும் அச்சிடப்பட்டுள்ளது. தண்ணீர் பாட்டில்கள் கலாவதியானது தெரியாமல் தொண்டர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.