எஸ்.கே. ஹல்தர், காவிரி ஆணையத்தின் தலைவரா? கர்நாடக அரசின் பிரதிநிதியா?
வைகோ கேள்வி
காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம், ஜூன் 17 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும்; அக்கூட்டத்தில் மேகேதாட்டு அணை குறித்தும் விவாதிக்கப்படும் என்று ஆணையம் கூறி இருந்தது. மேகேதாட்டு அணை பற்றி விவாதம் கூடாது என்று தமிழநாடு அரசு எதிர்ப்புத் தெரிவித்ததுடன், உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்து இருக்கின்றது. இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் ஜூன் 23 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கு இடையே, காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தலைவர் நிர்மல்குமார் உள்ளிட்ட மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர், மேட்டூர் அணை மற்றும் கல்லணை கால்வாய் பகுதிகளை கடந்த இரு நாட்களாக ஆய்வு செய்தனர். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தலைவர் எஸ்.கே.ஹல்தர், ஜூலை 23 ஆம் தேதி நடைபெறும் ஆணையக் கூட்டத்தில், மேகேதாட்டு அணை குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார். அவர், மறைமுகமாக அல்ல, ஒன்றிய பா.ஜ.க. அரசின் அறிவுறுத்தலின்பேரில், நேரடியாகவே கர்நாடகத்திற்கு ஆதரவாக ஒருதலைபட்சமாக செயல்படுகின்றார் என்பது தெரிகிறது.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு
காவிரி நடுவர் மன்றம் 5.2.2007 இல் வழங்கிய இறுதித் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்றம் 16.2.2018 இல் வழங்கிய தீர்ப்பு ஆகியவற்றில், காவிரியின் குறுக்கே தடுப்பு அணை அமைப்பதற்கு தமிழ்நாட்டின் இசைவைப் பெற வேண்டும் என்று தெளிவு படுத்தப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் பணி என்பது உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி காவிரியில் 177.25 டி.எம்.சி. நீர் கர்நாடகம் திறந்துவிடப்படுவதை உறுதி செய்வது மட்டும்தான். அதற்கும்கூட அதிகாரம் எதுவும் அற்ற, பல் இல்லாத ஆணையம் இது என்பதை, நாம் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றோம்.
தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது
காவிரி நீரைத் தடுத்து மேகே தாட்டுவில், ரூபாய் 9 ஆயிரம் கோடியில் 67.14 டி.எம்.சி. தண்ணீர் கொள்ளளவு கொண்ட அணையைக் கட்டினால், அதன்பிறகு, தமிழ்நாட்டிற்கு சொட்டு நீர் கூடக் கிடைக்காது. அதோடு 400 மெகாவாட் நீர்மின் திட்டத்தையும் செயல்படுத்த கர்நாடகம் முனைந்துள்ளது. கர்நாடகத்தின் பாசனப் பரப்பு 9.96 இலட்சம் ஹெக்டேரில் இருந்து 38.25 இலட்சம் ஹெக்டேராக பரந்து விரிந்து கொண்டே போகின்றது. ஆனால் தமிழ்நாடு கடந்த 48 ஆண்டுகளில் மொத்தம் 15.87 இலட்சம் ஹெக்டேர் அளவு சாகுபடிப் பரப்பை இழந்து விட்டது. கர்நாடகம் மாநிலம் பல்வேறு புதிய புதிய பாசனத் திட்டங்களுக்குக் காவிரி நீரைக்கொண்டு போகின்றது என்பதை மறுக்க முடியாது. மேகேதாட்டு அணை குறித்து விவாதிப்போம் என்று, காவிரிப் படுகைக்கு வந்து எஸ்.கே.ஹல்தர் கூறி இருப்பது கடும் கண்டத்திற்கு உரியது. தமிழ்நாடு அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் செயலாற்றி, கர்நாடக அரசின் திட்டத்தை முறியடிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.